Published:Updated:

தகவல்தொடர்பு, பாதுகாப்பு! - முக்கியப் பொறுப்புகளில் ஸ்ரீநகரைக் கலக்கும் பெண் அதிகாரிகள்

``இந்தச் சவாலான பணி பிடித்திருக்கிறது!" - ஶ்ரீநகரில் முக்கியப் பொறுப்புகளில் கலக்கும் இரண்டு பெண் அதிகாரிகள்

காஷ்மீர்
காஷ்மீர்

பதற்றம் நீடிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெண் அதிகாரிகள் இருவர், பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு பணிகளில் தங்களின் விரைவான மற்றும் விவேகமான நடவடிக்கைகளால் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்கள். சையது செஹ்ரிஷ் அஸ்கர் மற்றும் பி.கே நித்யா... இவர்கள்தான் கவனிக்கவைக்கும் அந்த இளம்பெண்கள்!

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு நான்கு நாள்கள் முன்னர்தான், ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு - காஷ்மீர் நிர்வாக அலுவலகத்தின் தகவல்தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார் டாக்டர் சையது செஹ்ரிஷ் அஸ்கர். பொதுவாக, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பணி இது. ஆனால், கடந்த 5-ம் தேதி முதல் அங்கு நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக தகவல் தொடர்புகள் நிறுத்தப்பட்டன. அந்நிலையில், பொதுமக்கள் 100 கிலோமீட்டர்கள் தொலைவுக்குள் இருக்கும் தங்களின் உறவுகளுடன் தொடர்புகொள்ள தொலைபேசி அழைப்புகளை ஒருங்கிணைத்துக் கொடுப்பது, அவர்களின் அவசர சிகிச்சைக்கு மருத்துவர்களைத் தொடர்புகொள்ள உதவுவது என உணர்வுக்குவியலுடன் இருந்த மக்கள் கூட்டத்துக்கு உதவினார் சையது. அவர்கள் கண்ணீருடன் அவருக்கு நன்றிகள் கூறினர்.

டாக்டர் சையது, 2013 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. ஒரு வயதுக் குழந்தையின் அம்மாவான இவர், எம்பிபிஎஸ் பட்டதாரி. ஜம்முவில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்தவர், ஒரு கட்டத்தில் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்வானார். ``ஒரு மருத்துவராக, நான் பல நோயாளிகளின் கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று ஶ்ரீநகர் மக்களின் நிலை வேறு வகையில் சவாலானது. அவர்களை ஒருங்கிணைக்கத் தேவையான கண்டிப்பும், அதே நேரம் அவர்களின் கலக்கத்தைத் தீர்க்க ஆதரவும் தரவேண்டிய பணி எனக்கு. ஒரு பெண்ணாக, இதுபோன்றதோர் அசாதாரண சூழலின் பொறுப்பைக் கையாண்டதில் எனக்குப் பெருமை'' என்று கூறுகிறார் சையது. இவரின் கணவர், பதற்றம் நிறைந்த புல்வாமா மாவட்டத்தின் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Syed Sehrish Asgar, P K Nitya, Srinagar,
Syed Sehrish Asgar, P K Nitya, Srinagar,
national herald

இரண்டாம் நபர், நித்யா. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயர் பட்டதாரி. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தவர். 2016 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான நித்யா, ஶ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டார். நேரு பார்க்கின் சப் டிவிஷனல் காவல்துறை அதிகாரியான நித்யா, ராம் முன்ஷி பாஹில் இருந்து ஹர்வன் தக்‌சி கிராமம்வரை, பதற்றம் நிறைந்த 40 கிமீ நிலப்பரப்பின் அமைதிக்குப் பொறுப்பு. தால் ஏரி, கவர்னர் மாளிகை, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவிஐபி-களின் இல்லங்கள் என அனைத்தும் இவரின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

``பொதுமக்களின் பாதுகாப்பு ஒரு பக்கம், விவிஐபி-களின் பாதுகாப்பு மறுபுறம், இவற்றுக்கிடையே போராட்டக்குழுக்களை சமாளிப்பது என, இது மிகச் சவாலான பணி என்றாலும் எனக்கு சவால்கள் பிடிக்கும்'' என்கிறார் நித்யா.

காஷ்மீர்
காஷ்மீர்

ஶ்ரீநகரில் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் பெண் ஐஏஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் சையதும் நித்யாவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.