Published:Updated:

`நள்ளிரவில் இறக்கிவிடப்பட்டேன்; ஆள் நடமாட்டமே இல்லை!' உபெர் டிரைவரால் பெண்ணுக்கு நடந்த துயரம்

ராம் பிரசாத்

பெங்களூருவில் உபெர் நிறுவன ஓட்டுநர், பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

உபெர்  கார்
உபெர் கார்

பெங்களூருவில் உபெர் காரில் பயணித்த பெண் ஒருவரிடம் ஓட்டுநர் தகாத வார்த்தைகளில் பேசி நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சமூகவலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உபெர் சப்போர்ட் டீம் தனக்கு தேவையான உதவிகளை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உபெர் நிறுவனம்
உபெர் நிறுவனம்

``என் வாழ்க்கையில் இன்று அதிர்ச்சிகரமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. எனது நண்பர்களுடன் இரவு உணவிற்குப் பிறகு உபெர் நிறுவனத்தின் காரில் ஏறினேன். அந்த ஓட்டுநர் தனது நண்பர்களுடன் போனில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது எனது வாடிக்கையாளர்கள் மிகவும் மோசமானவர்கள் என்றவர், திடீரென என்னை நோக்கி படித்த பெண்கள் வேலையை முடித்துவிட்டு 7 மணிக்கெல்லாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். சக ஊழியர்களுடன் குடித்துவிட்டு வெளியே சுற்றக் கூடாது என்றார். எனக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. எனக்கு கோபம் வந்தது. நான் குடிக்கவில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்றேன். உடனே அந்த நபர் என்னை அசிங்கமான வார்த்தைகளால் வசைப்பாடினார்.

எனக்கு வேறு வழி தெரியாததால் உபெர் ஆஃப்பில் இருந்த சேஃப்டி பட்டனை அழுத்தினேன். உபெர் சப்போர்ட் டீம் அந்த கார் டிரைவரை தொடர்பு கொண்டனர். அப்போது நான் அதிகமாக மது குடித்திருந்ததாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியாததால் அழத் தொடங்கிவிட்டேன். எனக்கு உதவுமாறு கெஞ்சினேன். போனில் தொடர்புகொண்ட பெண் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார். மேலும் எனக்கு வேறொரு வாகனத்தை உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்.

உபெர் ஆஃப்
உபெர் ஆஃப்

இதற்கிடையில் அந்த வாகன ஓட்டுநர் கடுமையாகப் பேசத்தொடங்கினார். உடனடியாக எனது வாகனத்தை விட்டு வெளியேறு இல்லை என்றால் உனது ஆடைகளை கிழித்துவிடுவேன் என்றார். நள்ளிரவு 11.15 மணியளவில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் இறக்கிவிடப்பட்டேன். உபெர் வாடிக்கையாளர் சேவை மையத்தின் அழைப்புக்காகக் காத்திருந்தேன். எனக்கு பயமாக இருந்தது. அந்த ஓட்டுநர் திரும்ப வந்து தாக்கிவிடுவாரோ என்று. 15 நிமிடங்களாக அங்கு காத்திருந்தேன் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு நண்பர்களை தொடர்புகொண்டு அவர்களின் உதவியுடன் அங்கிருந்து வந்தேன்” என அந்தப்பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக உபெர் நிறுவனம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.