Published:Updated:

`நீங்கள் இந்தியக் குடிமகன்தானா.. நிரூபியுங்கள்!’ - 127 பேருக்கு அதிர்ச்சி கொடுத்த யுஐடிஏஐ

ஆதார் - யுஐடிஏஐ
ஆதார் - யுஐடிஏஐ

ஹைதராபாத்தைச் சேர்ந்த 120 பேருக்கு அவர்களின் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்கும்படி ஆதார் செயல்படுவதை மேற்பார்வையிடும் யுஐடிஏஐ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே மாதிரியான அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதற்காக ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இதில் ஒருவரின் முகவரி, தகப்பனார் பெயர், பிற சுய விவரங்களுடன் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலக்க எண் ஒருமுறை ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படமாட்டாது. ஆதார் அட்டையை வைத்து ஒருவரை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம்.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 127 பேரிடம் அவர்களின் குடியுரிமை நிரூபிக்கும்படி ஆதாரை மேற்பார்வையிடும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பழைய ஹைதராபாத்தின் பவானி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முகமது சட்டர்கான் என்பவருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இதற்குமுன் ஒருமுறை கூட வெளிநாட்டுக்குச் செல்லாத நிலையில் இந்த நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், ``நீங்கள் இந்தியக் குடிமகன் இல்லை என்று எங்களுக்குப் புகார் வந்துள்ளது. நீங்கள் தவறான வழியில் தவறான தகவல்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதார் பெற்றுள்ளீர்கள்.

Vikatan

இந்தப் புகாரின் உண்மைத்தன்மையைக் கண்டறிய யுஐடிஏஐ-ன் ஹைதராபாத் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு ரங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மெகா கார்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் அனைத்து ஆவணங்களுடனும் நேரில் ஆஜராகி, நீங்கள் உண்மையான இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் நீங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியதாக எடுத்துக்கொள்ளப்படுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஆதார்
ஆதார்

இந்த விவகாரம் பற்றிச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து சட்டர்கானின் வழக்கறிஞர் முசாஃபருல்லா, ``முகமது சட்டர்கான் 100 சதவிகிதம் இந்தியர்தான். அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உட்பட அனைத்து ஆவணங்களும் உள்ளன. யுஐடிஏஐ இதேபோன்று எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று தெரியவில்லை.

ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு திருமண மண்டபத்தையே புக் செய்துள்ளனர். எனவே, நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நினைக்கிறேன். இந்திய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குட்படுத்த யுஐடிஏஐ-க்கு யார் அதிகாரம் வழங்கியது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறான தகவல்களின் மூலம் 127 பேர் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளதாக ஹைதராபாத் மாநிலக் காவல்துறையிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளது.
யுஐடிஏஐ

இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள யுஐடிஏஐ, ``ஆதார் என்பது இந்தியக் குடியுரிமைக்கான ஆவணம் இல்லை. விதிமுறைகளின்படி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 182 நாள்கள் இந்தியாவில் வசித்துள்ளார் என்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களின் மூலம் 127 பேர் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளதாக ஹைதராபாத் மாநிலக் காவல்துறையிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளது.

இதன் முதல் கட்ட விசாரணையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதார் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணைக்கு அந்தந்த நபர்கள் ஹைதராபாத் வட்டார அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு