Published:Updated:

`அரசியலில் அதிரடி என்ட்ரி; முதல்வர் வேட்பாளர்!’- பீகார் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

புஷ்பம் சௌத்ரி
புஷ்பம் சௌத்ரி

லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேஜஸ்வி - நிதிஷ்
தேஜஸ்வி - நிதிஷ்

ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றாலே நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் தான் முதல்வர் வேட்பாளர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு பெண் தன்னை பீகாரின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

`பீகாரைக் குறிவைக்கும் பிரசாந்த் கிஷோர்?!' -நிதிஷ் குமாருக்கு எதிராக உருவாகும் புது அணி

புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண்தான் தன்னை பீகாரின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகாரில் உள்ள சில இந்தி மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் நேற்று இவரின் முழுப் பக்க விளம்பரம் வெளியாகி மொத்த பீகார் அரசியல் கட்சியினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. புஷ்பம் பிரியா சௌத்ரி, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் சௌத்ரியின் மகள்.

முதல்வர் வேட்பாளர் விளம்பரம்
முதல்வர் வேட்பாளர் விளம்பரம்

பீகாரின் தர்பங்கா பகுதியில் பிறந்த புஷ்பம் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் (London School of Economics and Political Science) பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

ப்ளுரல்ஸ் (Plurels) என்ற தன் புதிய கட்சிப் பெயருடன் அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ``பீகாருக்குச் சிறகுகள் தேவை, பீகாரில் மாற்றம் தேவை. ஏனெனில் பீகார் சிறந்த மாற்றத்துக்குத் தகுதியான மாநிலம். மதி கெட்ட அரசியலை நிராகரியுங்கள். ப்ளுரல்ஸில் இணைந்து பீகாரை ஓட மற்றும் பறக்கச் செய்யுங்கள்” எனத் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புஷ்பம்.

``உலகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், பீகார் உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலமாகவே உள்ளது. இந்திய அளவிலும் நாம் இன்னும் கீழேதான் உள்ளோம். இது நாம் வகிக்கும் தரத்தைப் பற்றியது அல்ல. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியறிவின்மை, வேலையின்மை போன்ற அனைத்து வளர்ச்சிப் பற்றாக்குறைகளும் இங்கு உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் பீகாரில் பலர் இறப்புக்கு வழிவகுக்கும்” என புஷ்பம் பிரியா தன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பீகார் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புஷ்பம் பிரியாவின் அதிரடி அரசியல் என்ட்ரி பிற கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வினோத் சௌத்ரி
வினோத் சௌத்ரி

“என் மகள் மேஜர், படித்தவள். இது முழுவதும் அவரது முடிவு. கட்சியின் உயர்மட்டத் தலைவருக்கு அவர் சவால் விட்டால் கட்சி நிச்சயமாக அதை ஆதரிக்காது’என புஷ்பம் சௌத்ரியின் தந்தை வினோத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

புஷ்பம் சௌத்ரியின் விளம்பரங்கள் பத்திரிகைகள், சமூகவலைதளங்களையும் தாண்டி பீகாரின் வீதிகளில் பெரிய பெரிய பேனர்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் பீகார் அரசியலின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் புஷ்பம்.

அடுத்த கட்டுரைக்கு