Published:Updated:

`61,000 கி.மீ பயணம்;ஒன்றாக சாப்பிட்டோம், அழுதோம்!'-புல்வாமா வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்த உமேஷ்

உமேஷ் கோபிநாத் ஜாதவ்
உமேஷ் கோபிநாத் ஜாதவ்

புல்வாமா தாக்குதலால்``பெற்றோர்கள் அவர்களுடைய மகன்களை இழந்துள்ளனர். மனைவிகள் அவர்களுடைய கணவன்களை இழந்தனர். குழந்தைகள் அவர்களுடைய தந்தையை இழந்தனர், நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களை இழந்தனர்" என்று கூறியுள்ளார்.

ஜம்முவிலிருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு அவர்கள் வந்தபோது, 350 கிலோ வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல் நடந்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. தாக்குதலில் இறந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு காஷ்மீரில் லெத்போரா எனும் பகுதியிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உமேஷ் கோபிநாத் ஜாதவ் கலந்துகொண்டார்.

`இன்னொரு புல்வாமா தாக்குதல் நடக்கலாம்' - காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் எச்சரிக்கை!

யார் இந்த உமேஷ்?

ராஜஸ்தானில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பெங்களூருவுக்குத் திரும்புவதற்காகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று ராஜஸ்தானிலுள்ள விமான நிலையம் ஒன்றில் உமேஷ் காத்துக்கொண்டிருந்தார். விமானநிலையத்தில் இருந்த தொலைக்காட்சியில் புல்வாமா தாக்குதல் குறித்த செய்திகளைக் கவனித்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர், தாக்குதலில் இறந்த வீரர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மண்ணைச் சேகரித்து வந்து இந்திய வரைபடம் ஒன்றை வரைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கினார்.

இதற்காக சுமார் 61,000 கி.மீ தூரம் பயணித்து, தாக்குதலில் இறந்த வீரர்களின் உறவினர்களைச் சந்தித்துள்ளார். புனித யாத்திரையாகக் கருதி அவர் தொடங்கிய இந்தப் பயணத்தைக் கடந்த வாரம் முடித்துள்ளார். இந்தப் பயணம் தொடர்பான அனுபவத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

உமேஷ் கோபிநாத் ஜாதவ்
உமேஷ் கோபிநாத் ஜாதவ்

உமேஷ் பேசுகையில், ``வீரர்களின் குடும்பங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. ஏனெனில், சில வீரர்கள் குக்கிராமங்களிலிருந்து வந்துள்ளனர். பயணத்தில் வேறு சில சவால்களும் இருந்தன. தேசபக்தி குறித்து எழுதப்பட்டிருந்த என்னுடைய காரில் இரவுகளைக் கழித்தேன். வீரர்களின் உறவினர்களுடன் ஒன்றாகச் சாப்பிட்டேன்; ஒன்றாக அழுதேன். என்னுடைய பிறந்தநாளையும் வீரர் ஒருவரின் குடும்பத்தினருடன் கொண்டாடினேன்" என்றார்.

மேலும், ``தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தது குறித்து பெருமையாக உணர்கிறேன். அவர்களுடைய ஆசீர்வாதங்களையும் பெற்றேன். இந்தத் தாக்குதலால், பெற்றோர் அவர்களுடைய மகன்களை இழந்தனர். மனைவிகள் அவர்களுடைய கணவன்களை இழந்தனர். குழந்தைகள் அவர்களுடைய தந்தைகளை இழந்தனர், நண்பர்கள் அவர்களுடைய நண்பர்களை இழந்தனர். நான் அவர்களின் வீடுகளிலிருந்தும் அவர்களை தகனம் செய்த இடங்களிலிருந்தும் மண் சேகரித்து வந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Vikatan

புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணையின் நிலை :

இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமை இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் வெடிபொருள்களுக்கான மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் பேசும்போது, ``புல்வாமா தாக்குதல் தொடர்பாக விடைதெரியாத கேள்விகள் அதிகம் உள்ளன. தாக்குதலுக்கு உதவி செய்த குற்றவாளிகளும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இதில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பலரிடமும் கைமாறி வந்துள்ளது. கடைசியாக அந்த வாகனத்தை வைத்திருந்த சஜ்ஜத் பட் என்பவரும் ஜெய்ஷ் அமைப்பில் சேருவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு பிடிபட்டார். பின்னர், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்றனர்.

புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதல்

தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ``சந்தேகத்திற்குரிய நபர்கள் உயிருடன் இல்லாததால் தொழில்நுட்பரீதியிலான ஆதாரங்களை நிரூபிப்பது கடினமாக உள்ளது. வாகனம் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. காரை ஓட்டி வந்து தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு வெடிபொருள்கள் எப்படி கிடைத்தன போன்ற கேள்விகளுக்கான பதிலை நிரூபிக்க முடியவில்லை. மேலும், வெடிக்காத குண்டுகள் கிடைத்தால் அதை ஆய்வு செய்து சிலவற்றைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், எங்களுக்கு வெடித்த குண்டுகளின் எச்சங்களே கிடைத்தன" என்றும் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி நினைவஞ்சலி :

புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு ஆனதை நினைவுகூர்ந்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``கடந்த ஆண்டு நடந்த கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு எனது அஞ்சலிகள். நமது தேசத்தைக் காக்கவும் சேவை செய்யவும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த தனித்துவம் மிக்கவர்கள். வீரர்களின் இந்தத் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வேளையில் சில கேள்விகளை முன்வைக்கிறேன். தாக்குதலால் அதிகம் பயனடைந்தவர்கள் யார்.. தாக்குதல் குறித்த விசாரணைகளின் விளைவு என்ன.. தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பா.ஜ.க அரசில் யார் பொறுப்பேற்றுள்ளார்?" என ட்விட்டரில் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு