Published:Updated:

`நீங்கள் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாகச் சத்தமாகப் பேச வேண்டும்!’ - மேற்குவங்கத்தில் அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எந்தக் காரணத்துக்காகவும் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் மக்கள் அதற்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக பெரும் கட்சியாக பா.ஜ.க உருவாகி வருகிறது. அங்கு எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார்.

கொல்கத்தா
கொல்கத்தா

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஷாகித் மினாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் மற்றும் மேற்குவங்க தேர்தல் பிரசார தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. அமித் ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பலரும் கொல்கத்தா விமான நிலையத்தை முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல இடங்களில் கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ப.சிதம்பரம் ஓவர்... அடுத்தது அகமது படேல்... அமித் ஷாவின் சபத அரசியல்!

பெண்களும் மாணவர்களும் சாலைகளில் இறங்கி `கோ பேக் அமித் ஷா’ என்ற முழக்கங்களுடன் போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் அமித் ஷாவின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. இதனால் காலை முதல் கொல்கத்தா சற்று பதற்றமாகவே காணப்பட்டது.

இதற்கிடையில், ஷாகீத் மினார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``தேசத்தைப் பிளவுபடுத்தி அதன் அமைதியைச் சீர்குலைக்க விரும்பும் நபர்களுக்கு மத்திய தேசியப் பாதுகாப்பு காவலர்கள் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது மோடி தலையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கையிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு செயல்திறன் மிக்க பாதுகாப்புக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பாஜக பொதுக்கூட்டம்
பாஜக பொதுக்கூட்டம்

உலகத்தில் உள்ள அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். 10,000 வருடங்களாக இந்தியாவை யாரும் தாக்கியதில்லை என்ற வரலாறு உள்ளது, இனியும் நம் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க விடமாட்டோம். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறது. இது வங்காளத்தில் உள்ள எதிர் சக்திகளைத் தோற்கடிப்பதற்கான போராட்டமாக இருக்கும். எந்த ஒரு அநீதியையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என அனைத்து வாக்காளர்களிடமும் சொல்ல விரும்புகிறேன்.

டெல்லி வன்முறை கோபம்... அமித் ஷாவைத் தாண்டி அஜித் தோவலிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?

வங்காளத்தில் உள்ள ஏழைகளைச் சுரண்டுவதற்கு எதிரான போராட்டமாக இந்த யாத்திரை அமையும். மம்தா பானர்ஜி முன்னதாக எதிர்க்கட்சியாக இருந்தபோது குடியுரிமைச் சட்டம் வேண்டும் என்றார். அதையே பிரதமர் மோடி கொண்டுவந்த பிறகு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் பக்கம் நின்று அதை எதிர்க்கிறார். மோடி உங்களுக்கு அளித்த பரிசு குடியுரிமை சட்டத்திருத்தம். இதற்கு ஆதரவாக நீங்கள் சத்தமாகப் பேச வேண்டும். இந்தச் சட்டத்தினால் யாரும் தங்கள் குடியுரிமையை இழக்கவில்லை.

அமித்ஷா
அமித்ஷா

வங்காளத்தின் ஏழை விவசாயிகளுக்காக மத்திய அரசு வழங்கும் 6,000 கோடி ரூபாய் அவர்களுக்குச் சென்றடைவதில்லை. பிரதமர் மோடி மேற்குவங்கத்தை அபிவிருத்தி செய்ய நினைக்கிறார். ஆனால், அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதிப்பதில்லை. மக்களாகிய நீங்கள் 20 வருடங்களை கம்யூனிஸ்ட்டுகளுக்கும் 10 வருடங்களை மம்தா பானர்ஜிக்கும் வழங்கினீர்கள் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எங்களுக்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள் வங்காளத்தைச் செழிப்பான பூமியாக மாற்றிக்காட்டுவோம்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு