பட்ஜெட் 2023 Live Updates: வரி, விலை உயர்வு, சேமிப்பு, வேலைவாய்ப்பு... கவனிக்க வேண்டியவை!

2023 -24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் இங்கே...
தங்கம் முதல் வருமானவரி வரை மத்திய பட்ஜெட்டில் ஹைலைட்ஸ்!
புதிய வருமான வரி முறை: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை
தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
புகையிலை பொருள்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படும். இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக அதிகரிக்கலாம்.
ஆன்லைன் வங்கி பணப்பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி.
மூத்த குடிமக்களின் அதிகபட்ச சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
7.5 சதவிகித வட்டியில் பெண்களுக்கான சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி; இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா' மையங்கள் அமைக்கப்படும்.
மொபைல் உற்பத்திக்கான பாகங்கள், கேமரா லென்ஸ்கள் மற்றும் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
பசுமை வளர்ச்சிக்கு 19,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 2070-ம் ஆண்டுக்குள் `ஜீரோ எமிஷன்' என்று சொல்லப்படும் மாசில்லாத நிலை உருவாக்கப்படும்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
5ஜி ஆப் டெவலப்மென்டுகளுக்கு 100 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து, 4 மண்டலங்களில், 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.
வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.63 கோடி கடன் கொடுக்க திட்டம்.
மனிதர்களால் மனிதக் கழிவுகள் அகற்றும் நிலை மாற்றப்பட்டு, நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை 100% நடைமுறைபடுத்தப்படும்.
இறக்குமதி வரி: என்னனென்ன பொருள்கள் விலை உயரும்?
தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும். கேமரா லென்ஸ்கள் மற்றும் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.
சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5%-லிருந்து 15%-ஆக அதிகரிக்கப்படும்.
செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்க அதன் உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.
இறால் உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும்.
மேலும்,புதிய கூட்டுறவு அமைப்புகளுக்கு 15 சதவிகிதமாக வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக உயரும்.
``ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது"
தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டு , வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரி நடைமுறையில் ரூ.7 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமான இருந்தால் அதற்கு வருமான வரி கிடையாது.
தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றம்:
ரூ. 0 - 3 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ. 3-5 லட்சம் வரை - 5%
ரூ. 5-9 லட்சம் வரை - 10%
ரூ. 9-12 லட்சம் வரை - 15%
ரூ. 12-15 லட்சம் வரை - 20%
ரூ. 15 லட்சம் மேல் - 30%
ரூ.9 லட்சம் வருமானம் உள்ளவர்கள் முன்பு ரூ.60 ஆயிரம் வரியாகச் செலுத்தினார்கள். இனி ரூ.45 ஆயிரம் மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
மூத்த குடிமக்களின் அதிகபட்ச சேமிப்பு வரம்பு உயர்வு!
7.5% வட்டியில் பெண்களுக்கான சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பெண்கள்/பெண்குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டத்தில்,7.5 சதவிகித வட்டியில், அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்களின் அதிகபட்ச சேமிப்பு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பூமியைப் பாதுகாக்க பிரானாம், ஜீரோ எமிஷன் திட்டம் அறிமுகம்!
தாய் பூமியைப் பாதுகாக்கும் 'பிரானாம்' திட்டம்,
கோவர்தன் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு,
பயோகேஸ் உற்பத்திக்கு சிபிஇ கட்டாயம்,
லடாக்கில் ரூ.20700 கோடியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம் ஆகியவற்றை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
2070-ம் ஆண்டுக்குள் ஜீரோ எமிஷன் என்று சொல்லப்படும் மாசில்ல நிலை உருவாக்கப்படும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இதில் மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி...
இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில்துறை தேவையையும் இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா மையங்கள்' அமைக்கப்படும். ஏஐ, கோடிங் உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
``சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"
சிறுதானியங்கள் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள மிகவும் உதவுகின்றன. அந்த வகையில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தினை ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.
பசுமை வளர்ச்சிக்கு ரூ.19700 கோடி ஒதுக்கீடு!
பசுமை வளர்ச்சி: 2070 -க்குள் ஜிரோ எமிஷன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வாலன்டரி செட்டில்மென்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
டிஜிட்டல் லாக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
5ஜி ஆப் டெவலப்மென்டுகளுக்கு 100 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து, 4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.
வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமும் விவசாயிகளுக்கு ரூ.63 கோடி கடன் கொடுக்க திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.
``கழிவுகளை அகற்றும் பணியில் 100% இயந்திரங்கள்... விரைவில் நடவடிக்கை”
மனிதர்களால் மனிதக் கழிவுகள் அகற்றும் நிலை மாற்றப்பட்டு, நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை கொண்டுவரப்படும்.
கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் 100% இயந்திரங்களை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
அரசு ஊழியர்கள் திறனை வளர்க்க கர்மயோகி திட்டம்..
அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கான தேசிய தரவுகள் நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.
டிஜிட்டல் இந்தியா இலக்குக்கு கேஒய்சி நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும்.
டிஜிட்டல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்ட் பொதுவான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.
``மாநிலங்களின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்படும்..”
நகர மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுக்கும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மாநிலங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தேவையான கடன்களைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும்.
வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி மற்றும் விவசாயிகளுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு
ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,800 ஆசிரியர்கள் நியமனம்...
பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆதிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பு.
மத்திய பட்ஜெட் 2023 :தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்...
``மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். மேலும் படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும்.
மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்" என அறிவிப்பு.
மத்திய பட்ஜெட் 2023 : 7 முக்கிய இலக்குகள்...
1.எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
2.ஏழைகளின் முன்னேற்றம்
3.பசுமை வளர்ச்சி
4.பழங்குடியினர் மேம்பாடு.
5. விவசாயிகள், பெண்கள் வளர்ச்சி
6.இளைஞர்களின் எதிர்காலம்
7. உட்கட்டமைப்பு வளர்ச்சி
``விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்"
விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும்..
மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு..
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்..
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு.
என அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2023 Live Updates: முக்கிய அம்சங்கள்...
தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக அதிகரித்துள்ளது..
விவசாயத் துறையில் ஸ்டாட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு..
வரும் 2023-2024-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம்...
விவசாயக் கடன் வளர்ச்சி இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்வு.
இந்தக் கடன்கள் கால்நடை வளர்ப்பு, பால் சார்ந்த தொழில்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.
மத்திய பட்ஜெட் 2023: 7 முக்கிய அம்சங்கள்...
இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பாதால், இந்திய உலக நாடுகளின் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது..
ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கடைகோடி மக்களுக்கும் சேவை உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
``விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டது"
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளிக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை ரூ.2.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டது.
``தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது" - நிர்மலா சீதாராமன்
"பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்" - நிர்மலா சீதாராமன் உறுதி!
உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா இருக்கிறது. இந்திய தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.
பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கான வலிமையும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நிறைய வாய்ப்புகளையும் இந்தியப் பொருளாதாரம் கொண்டிருக்கிறது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
11.74 கோடி வீடுகளுக்கு டாய்லெட்,
9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்ஷன்,
47.5 கோடி ஜன் தன் வங்கிக் கணக்கு,
44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது!
"இந்தியா நடப்பு ஆண்டில் 7% பொருளாதார வளர்ச்சியை காணும். இது மற்ற நாடுகளை விட அதிகம். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Amrit kaal பட்ஜெட் என்றால் என்ன?
அம்ரித் கால் என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பிரதமர் மோடி பயன்படுத்திவருகிறார். பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர்.
நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்றால் 'புதிய தொடக்கம்' என்று பொருள். இந்தியா @100 என்ற இலக்கை முன்வைத்து புதிய பாய்ச்சலுக்கு முன்னெடுக்கும் பட்ஜெட் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
Union Budget 2023-24: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

நிதி அமைச்சர் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் 2023 - 2024-க்கு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியுள்ளது. பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
மத்திய அமைச்சரவை பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் வழங்கியது
இன்று காலை 11 மணிக்கு `மத்திய பட்ஜெட் 2023 - 24' தாக்கல் ஆகிறது. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் ஆன போது, கொரோனாவின் பாதிப்பில் இருந்து இந்தியா மெள்ள மெள்ள மீள ஆரம்பித்திருந்தது. தற்போது கொரோனா தாக்கத்தின் பிரச்னை இல்லை என்றாலும் கூட, கடந்த 2022-ம் ஆண்டில் ஆரம்பித்த ரஷ்யா -உக்ரைன் போர் பதற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு, உலகநாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார பதற்றம், அதிகரிக்கும் வேலையிழப்புகள், அதானி குழுமத்தை ஆட்டம் காண வைக்கும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை என்கிற மிகவும் பரபரப்பான மற்றும் பதற்றமான சூழல்களுக்கு இடையே இந்த பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
கடந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை மக்களும் தொழில் துறையினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகத்தான் அது அமைந்திருந்தது. இருப்பினும், தற்போது வெளியாகவுள்ள பட்ஜெட் மீது நடுத்தர வர்கத்தினரும், தொழில்துரையினரும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட் 2023: பெண்களுக்கான பட்ஜெட்டாக இருக்குமா?

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத ஒரு முக்கியமான விஷயம் 2023-24 மத்திய பட்ஜெட்டில் காண்கிறோம். என்னவெனில் பட்ஜெட்டை நாட்டின் இரண்டு முக்கிய பெண்கள் முன்னெடுக்கிறார்கள். குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை அலங்கரிக்கிறார்கள். இந்தியாவில் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் வெகு காலமாகவே போராடும் சூழலில் சமீப காலங்களில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. பெண்கள் முன்னேற்றத்தின் முன்மாதிரியாக இருக்கும் இரண்டு முன்னணி வலிமையான பெண்கள் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பது பெருமைப்படத்தக்க விஷயம் என்றே சொல்லலாம்.
மத்திய பட்ஜெட் 2023 : இந்த முறையும் காகிதமில்லா பட்ஜெட்!

மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று வாசிக்கவுள்ள பட்ஜெட் உரையுடன் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும். காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.
கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்தப் பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடப்பாண்டு தாக்கல் செய்யப்படும் இதுவே முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
மத்திய பட்ஜெட் 2023: ஏற்றத்தில் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்!

இன்று மத்திய 'பட்ஜெட் 2023-2024' நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகவுள்ள நிலையில், சென்செக்ஸ் 443 புள்ளிகள் அதிகரித்து 60,000 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டியும் 130 புள்ளிகள் அதிகரித்து 17,815 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாக ஆரம்பித்திருக்கிறது.
ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரட், இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்.

மத்திய பட்ஜெட் 2023 Live Updates: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு வருகை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலுக்கு முன் பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மத்திய அமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரத் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
``இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது" ஆய்வறிக்கையில் தகவல்!
பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் தாக்கல் செய்தார்.
"கொரோனா பாதிப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரின் தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7%-ஆக இருக்கும், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வரி வசூல் சிறப்பாக இருந்தது, நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புக்குள் வந்துவிட்டது, சமூக நலனுக்கான செலவு ரூ.21.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, வேளாண்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3%-ஆக அதிகரிப்பு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது, சிறு, குறு தொழில் துறையினருக்கான கடன் வழங்கல் 30.6% அதிகரித்துள்ளது" உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
மத்திய பட்ஜெட் 2023- 2024 லைவ் அப்டேட்களுக்கு விகடனுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.