Published:Updated:

ஸ்டான் ஸ்வாமி மரணம்: `மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்..!’- வலுக்கும் குரல்கள்!

ஸ்டான் ஸ்வாமி
ஸ்டான் ஸ்வாமி

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றிய அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமியின் மரணம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணத்துக்கு, மத்திய பா.ஜ.க அரசே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி. 84 வயதாகும் அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவந்தவர். எல்கார் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஏராளமான உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார். இவரது மரணம் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட பல தரப்பினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளத்தில் பரவிய தவறான படம்
சமூக வலைதளத்தில் பரவிய தவறான படம்

இந்தநிலையில், ஆக்சிஜன் பொருத்தப்பட்ட நிலையில் வயதான ஒருவர் கட்டில்மீது அமர்ந்திருக்கும் ஒரு முதியவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மூக்கில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருக்க. அவரது கால்கள் இரும்புச்சங்கிலியால் கட்டிலுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அவர்தான் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி என்று அந்தப் படம் சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் படம், எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆட்சியாளர்கள் மீது கோபத்தையும் ஏற்படுத்தியது.

பின்னர், அந்தப் படத்தில் இருப்பவர் ஸ்டான் ஸ்வாமி அல்ல என்றும், அது கொலை வழக்கில் தண்டனை பெற்ற மற்றொருவரிடம் படம் என்றும் தெரியவந்தது. அதற்காக, யாரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டுவிடவில்லை. காரணம், இதே போன்ற சூழலில்தான், மரணத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஸ்டான் ஸ்வாமி. அவரது கால்கள் இரும்புச்சங்கிலியால் இரும்புக்கட்டிலுடன் கட்டப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டு, கிட்டத்தட்ட இந்தப் படத்தில் இருப்பவரைப் போன்ற சூழலில்தான் ஸ்டான் ஸ்வாமி இருந்திருக்கிறார்.

ஸ்டான் ஸ்வாமி என்ன சமூகவிரோதியா? பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு சமூகச் செயற்பாட்டாளர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது எப்படி?

ஆதிக்க சமூகத்தினரின் பெஷாவா படைகளை 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தோற்கடித்ததன் நினைவாக பீமா கோரேகானில் நினைவுச்சின்னம் ஒன்று உள்ளது. அங்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் கூடுவது வழக்கம். அதுபோல 2018-ம் ஆண்டு, ஜனவரி ஒன்றாம் தேதி அவர்கள் கூடியபோது, அவர்களுக்கும் மற்ற தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 31-ம் தேதி புனேயில் நடைபெற்ற எல்கர் பரிஷத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதுதான், பீமா கோரேகானில் நடைபெற்ற மோதலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

வரவர ராவ்
வரவர ராவ்

எல்கர் பரிஷத் கூட்டத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், ஸ்டான் ஸ்வாமி உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பேசினர். எல்கர் பரிஷத் கூட்டப் பேச்சுகள் குறித்து மாநில போலீஸார் விசாரித்துவந்தனர். பின்னர் அந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. எல்கர் பரிஷத்துக்கு உதவி செய்ததாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

2018, ஆகஸ்ட் 22-ம் தேதி புனே காவல்துறை ஸ்டான் ஸ்வாமி பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது. அவரைக் கைது செய்வதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றம் அக்டோபர் 26-ம் தேதி பாதுகாப்பு அளித்தது. 2020-ம் ஆண்டு, அக்டோபர் 8-ம் தேதி என்.ஐ.ஏ-வால் அவர் கைதுசெய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 23-ம் தேதி நிராகரித்தது. 83 வயதில் முதுமை காரணமாக ஏராளமான உடல் உபாதைகளுடன் சிரமங்களைச் சந்தித்துவந்த அவர், திரவ உணவை உறிஞ்சிக் குடிப்பதற்கு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார்.

பீமா கோரேகான்
பீமா கோரேகான்

முதுகுவலி, காது கேளாமை, பார்க்கின்சன் எனும் பக்கவாதம், எலும்புத் தேய்மானம், நரம்பு பாதிப்புகள், நடுக்கம் என அவருக்கு இருந்த உடல் உபாதைகள் குறித்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மிகப்பெரிய பட்டியலையே தயாரித்திருக்கிறார்கள். அவ்வளவு மோசமான நிலையில், திட உணவை உட்கொள்ள முடியாத சூழலில், ஸ்ட்ராவும் சிப்பரும் கேட்டு நவம்பர் 6-ம் தேதி நீதிமன்றம் சென்றார். என்.ஐ.ஏ என்ன சொன்னது தெரியுமா? ஸ்ட்ராவும் சிப்பரும் இல்லை என்று நவம்பர் 26-ம் தேதி நீதிமன்றத்தில் பதில் சொன்னது. அதன் பிறகு என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு இரக்கம் வந்ததோ என்னவோ, டிசம்பர் 4-ம் தேதி ஸ்ட்ராவையும் சிப்பரையும் கொடுத்திருக்கிறார்கள்.

அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்யப்படவில்லை என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில், நெருக்கடி மிகுந்த டலோஜா சிறையிலிருந்து அவரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவரை ஜாமீனில் விட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. மருத்துவக் காரணங்களுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட அவரது ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ நீதிமன்றம் கடந்த மார்ச் 22-ம் தேதி நிராகரித்தது. ஏப்ரல் 26-ம் தேதி அவர் மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதையடுத்து, அவரது மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு மே 4-ம் தேதி உத்தரவிட்டது. தன்னால் சாப்பிட முடியவில்லை, நடக்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, அவரைச் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று மே 28-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் வெடிக்கும் ரஃபேல் விவகாரம்; தேர்தல் காலத்தில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவா?!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் மருத்துவமனைக்கே அவர் மாற்றப்பட்டார். அதன் பிறகு, மே 30-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு மிக மோசமான உடல் உபாதைகள் இருப்பதாகவும், அவரைத் தனியார் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஜூன் 17-ம் தேதி கூறியது. ஜூலை 4-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வென்டிலேட்டரும் பொருத்தப்பட்டது. ஜூன் 5-ம் தேதி மரணமடைந்தார்.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

அவரது மரணச்செய்தி வெளியானவுடன் அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கொந்தளித்துவருகிறார்கள். ``பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று ஸ்டான் ஸ்வாமிக்குப் புகழஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ``அவர் கைதுசெய்யப்பட்டதற்கும் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்காமல்தான் அவர் மரணமடைந்திருக்கிறார். அதற்காக மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்தார் என்பது ஸ்டான் ஸ்வாமி மீதான குற்றச்சாட்டு. அதே குற்றச்சாட்டில், எல்கர் பரிஷத் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் கவிஞர் வரவர ராவுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது. மற்ற அனைவரும் சிறையிலேயே நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு