Published:Updated:

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராகிறார் ஹர்ஷ் வர்தன்?! - தலைமைப் பொறுப்பின் பணிகள் என்ன?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் தலைவர் பதவியை இந்தியாவுக்கு ஒதுக்க 194 நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகள் பங்கேற்றுள்ள இந்தநிலையில் உலக சுகாதார அமைப்பின் பங்கு என்பது மிகப்பெரியது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும், அந்த அமைப்பு தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது.

WHO
WHO

இந்த நிலையில், 194 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு தனது உறுப்பு நாடுகளின் கூட்டத்தை கடந்த திங்கள் அன்று கூட்டியது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உலக நாடுகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாகக் கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று, 34 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் தலைவர் பதவியை இந்தியாவுக்கு ஒதுக்க 194 நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி இந்த வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத் தலைவராக ஹர்ஷ் வர்தன் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், மத்திய அமைச்சராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த நிர்வாக வாரிய தலைமை பொறுப்பு என்பது முழுநேர பணி அல்ல. நிர்வாக சபையின் கூட்டங்களுக்கு மட்டும் அவர் தலைமை தாங்குவார். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்தக் கூட்டம் நடைபெறும். ஜனவரி மாதம் ஒரு கூட்டமும் பின் மே மாதம் இரண்டாம் கூட்டமும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

உலக சுகதார அமைப்பின் ஆலோசனைகளையும் கொள்கைகளையும் அமல்படுத்துவதுதான் இந்த நிர்வாக வாரியத்தின் முக்கியப் பணி. முக்கியமாக உலக சுகாதார அமைப்பின் பணிகளை எளிதாக்குவது தொடர்பான ஆலோசனைகளை இந்தக் குழு வழங்கும்.

மருத்துவரான ஹர்ஷ் வர்தன், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர். 1993-ம் ஆண்டு முதல் முறையாக டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே அவர் டெல்லியின் சுகாதார மற்றும் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து 1998, 2003, 2008, 2013 ஆகிய டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஒரே தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

பின்னர் 2014, 2019 -ம் ஆண்டுகளில் நடந்த எம்.பி தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார். கொரோனா பரவத் தொடங்கியது முதலே ஹர்ஷ் வர்தன் தலைமையில் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தியாவில் முன்னதாகவே கொண்டு வரப்பட்ட லாக்டெளன் நடவடிக்கை காரணமாக ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு