Published:Updated:

`எனக்கு பெல்ட்டால் அடிக்கவும் தெரியும்!’ - தனிமை முகாமில் அதிகாரிகளிடம் ஆவேசமடைந்த மத்திய அமைச்சர்

அமைச்சர் ரேணுகா சிங்
அமைச்சர் ரேணுகா சிங்

``பா.ஜ.க-வில் உள்ளவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் அவர்களிடம் காட்டும் பாகுபாட்டை மறந்துவிடுங்கள். அறையில் அடைத்துவைத்து பெல்ட்டால் அடிப்பது எனக்கும் நன்றாகத் தெரியும்.”

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்டமாக இந்த ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களையும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் மற்றும் சந்தேகம் உள்ளவர்களையும் அரசின் கொரோனா தனிமை முகாமில் மாநில அரசுகள் தங்க வைப்பது வழக்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கொரோனா தனிமை முகாமின் மோசமான நிலைமையைப் பற்றி தெரிவித்த ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

அமைச்சர் ரேணுகா சிங்
அமைச்சர் ரேணுகா சிங்
Print-126

சத்தீஸ்கர் மாநிலம், பலராம்பூர் பகுதியில் உள்ள தனிமை மையத்தில் திலிப் குப்தா என்பவரும் தங்கிவந்துள்ளார். இவர், டெல்லியிலிருந்து அம்மாநிலத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த தனிமை முகாமில் மாவட்ட அதிகாரிகள் செய்துள்ள மோசமான ஏற்பாடுகளைக் குறித்தும் போதிய வசதிகள் இல்லாமை குறித்தும் வீடியோ எடுத்து குற்றச்சாட்டுகளை எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கோபமடைந்த பலராம்பூர் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் இருவரும் திலிப்பை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மத்திய பழங்குடிகள் விவகார இணை அமைச்சர் ரேணுகா சிங், கோபமாக அதிகாரிகளை நோக்கி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அடிப்படை வசதிகளற்ற தனிமை முகாம்கள்; சுவரை உடைத்துத் தப்ப முயன்ற நபர்கள்! ராமநாதபுரம் அதிர்ச்சி

அமைச்சர் ரேணுகா சிங் அதிகாரிகளிடம் பேசும்போது, ``பா.ஜ.க -வில் உள்ளவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் அவர்களிடம் காட்டும் பாகுபாட்டை மறந்துவிடுங்கள். அறையில் அடைத்துவைத்து பெல்ட்டால் அடிப்பது எனக்கும் நன்றாகத் தெரியும். அவர் தனது உரிமைகளை அறிந்து வைத்திருப்பதால், நீங்கள் அவரை அடித்துவீட்டீர்கள். எங்களுடைய அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சியில் இல்லை என நினைக்க வேண்டாம். நாங்கள் 15 வருடங்கள் இங்கு ஆட்சி செய்துள்ளோம். கொரோனா நடவடிக்கைகளுக்குப் போதுமான நிதி மத்திய அரசிடம் உள்ளது. மக்களுக்குத் தேவையான பணம் அவர்களுக்கு செல்கிறதா என்பதை நான் கவனிப்பேன். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்திருந்தால், முழு நேரத்தையும் எனது தொகுதியில் செலவிட்டிருப்பேன். ஆனால், மத்திய அமைச்சராகவும் இருப்பதால் டெல்லி செல்லவேண்டிய நிலை உள்ளது. என்னுடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அநீதி இழைப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ரேணுகா சிங்
அமைச்சர் ரேணுகா சிங்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சிங், ``தனிமை முகாமில் உள்ள மோசமான சூழலைக் கண்ட திலிப் குப்தா, அதை வீடியோ எடுத்து குற்றம் சாட்டியுள்ளார். இதனால், மாவட்ட அதிகாரிகள் கோபம் அடைந்துள்ளனர். தாசில்தார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இருவரும் அவரை பெல்ட்டால் அடித்து அச்சுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவரை வேறு இடத்துக்கும் மாற்றம் செய்துள்ளனர். இதனால், திலீப்பின் குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கியுள்ளனர். அவரது உறவினர்கள் இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தனர். நான் அந்த தனிமை மையத்தை அடைந்தபோது, திலீப் மோசமாக தாக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இரண்டு அதிகாரிகளும் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டனர்” என்று கூறியுள்ளார்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அமைச்சர், மாநில அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலராம்பூர் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தாசில்தார் ஷதாப் கான் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினய் குப்தா இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ``குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கவே மையத்துக்கு சென்றேன். நான் அவரை தாக்கவில்லை. என்ன மாதிரியான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதைப் பற்றி அமைச்சர் யோசிக்க வேண்டும். அவர் பேசியதால் எங்களுடைய உணர்வுகள் மிகவும் புண்பட்டுவிட்டன. கொரோனாவுக்கு எதிராக அனைத்து அதிகாரிகளும் இணைந்து வேலை செய்துவருகிறோம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`திடீர் முடக்கம்; குற்றப்பின்னணி.. 54 நாள்கள் தனிமை!’- ஜெர்மானியரின் டெல்லி ஏர்போர்ட் ஸ்டோரி
அடுத்த கட்டுரைக்கு