Published:Updated:

`இதுதான் முதல் சுதந்திர தினம்' - உற்சாக மிகுதியில் லடாக்கியர்கள்!

புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில் மிகுந்த ஆராவரத்தோடு சுதந்திரத்தினத்தை கொண்டாடினார்கள் லடாக்கியர்கள்.

லடாக்
லடாக் ( ந.ராஜமுருகன் )

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட நாள் முதல் அங்கு பதற்றமான நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து பிரிக்கப்பட்ட புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில் மிகுந்த ஆராவரத்தோடு சுதந்திரத்தினத்தை கொண்டாடினார்கள் லடாக்கியர்கள்.

லடாக் மக்கள்
லடாக் மக்கள்

இதுபற்றி நம்மிடம் பேசிய லடாக் நண்பர் ஸ்டான்ஸின் (stanzin), ''லடாக் மக்கள் பொதுவாகவே சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினத்தை ஆர்வமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையான காஷ்மீரிலிருந்து தனி மாநிலமாக பிரிந்து இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்ததை கொண்டாடி வருகின்ற நிலையில் இன்று சுதந்திர தினத்தை மிகுத்த மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

லடாக்கிலுள்ள போலோ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள், பெரியவர்கள் என்று கடந்த ஆண்டை விட இந்த முறை அதிக கூட்டம். பலரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

லடாக்
லடாக்

முதல் முறையாக காஷ்மீர் கொடி இல்லாமல், இந்திய தேசியக் கொடி மட்டும் ஏற்றி கொண்டாடினோம். எங்களோடு பி.ஜே.பி. எம்.பி ஜிம்யாங் செரிங் நம்கியால் கலந்துகொண்டு மெயின் மார்க்கெட் உட்பட பல இடங்களில் மக்களோடு நடனமாடி உற்சாகமாக கொண்டாடினார்.

பலர் வீடுகளிலும் இனிப்பு செய்து அனைவருக்கும் வழங்கினார்கள். இதை போன்ற நாட்களில் தலைநகர் டெல்லியில் மட்டுமே விழாக்கோலமாக இருக்கும். அதனை இப்போது லடாக்கில் பார்க்க முடிந்தது. இந்த நல்ல நாளில் நாங்கள் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்.

லடாக் மக்கள்
லடாக் மக்கள்

இந்த அரசாங்கம் இனிவரும் காலங்களில் இந்த மண், மக்கள் மற்றும் இந்த மண்ணின் கலாச்சரம் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றி எங்கள் வாழ்வை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுச செல்ல வேண்டும்'' என்றார்.