Published:Updated:

`100 எலிகளைக் கொன்றுவிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பூனை!’- காங்கிரஸை விமர்சித்த யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

`ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அந்த லாரி வந்தது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும். மற்றொரு லாரி பஞ்சாப் பகுதியிலிருந்து வந்துள்ளது. காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்களிலிருந்தும் புலம்பெயர்ந்தவர்கள் வருகின்றனர்”

இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். மாநிலங்களின் எல்லைகள் பூட்டப்பட்டு போக்குவரத்துகளும் முடக்கப்பட்டதால் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். அவர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களிலேயே முகாம்கள் அமைத்து கொடுக்கப்பட்டாலும் உணவு, இருப்பிடம் என இன்றியமையாத தேவைகளுக்கே கஷ்டப்படுவதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, பல தொழிலாளர்களும் நடைபயணமாகவும் கிடைத்த வாகனங்களில் ஏறியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கினர். அவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும் மற்றொரு லாரியும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவுரயா எனும் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 26 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

ராஜஸ்தானில் வேலை பார்த்து வந்த இந்தத் தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கு உத்தரப்பிரதேசம் வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பிரிவு, யோகி ஆதித்யநாத்தை உணர்ச்சியற்றவர் என்று விமர்சித்ததோடு அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு யோகி ஆதித்யநாத் பதிலளித்து காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளார்.

Vikatan

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத், ``துரதிஷ்டவசமாக உத்தரப்பிரதேசத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அந்த லாரி வந்தது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும். மற்றொரு லாரி பஞ்சாப் பகுதியிலிருந்து வந்துள்ளது. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர்ந்தவர்கள் வருகின்றனர். பீகார் மற்றும் ஜார்க்கண்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ஏராளமான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸினர் என்ன செய்துகொண்டிருந்தனர்? நீங்கள் மக்களை சுரண்டுவீர்கள். பின்னர், நேர்மையானவர்கள் போன்று முகமூடியை அணிந்துகொள்வீர்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இது காங்கிரஸூக்கு வெட்கக்கேடான முகம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தைக் கேலியாகப் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைமைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியில் ஒருபிரபலமான பழமொழி உண்டு. `நூறு எலிகளைத் தின்றுவிட்டு பூனை ஒன்று பாவமன்னிப்பு கேட்குமாம்...’ என்பார்கள். அது இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சிக்குப் பொருந்தும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
AP

சமாஜ்வாதி கட்சி, இந்தச் சம்பவத்தைக் கொலை என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும்,`இதற்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் கடமை’ என்றும் அக்கட்சி சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்துக்குப் பின்னர் உத்தரப்பிரதேச மாநில அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்குள் நுழைவதை நிறுத்திவைப்பதாக அறிவித்தது. இதனால், தொழிலாளர்கள் மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தனர். இந்த மாதிரியான சாலை விபத்துகள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த விபத்துகள் நடந்துள்ளன.

`கரூர் எங்களுக்கு இன்னொரு வீடு; திரும்பி வருவோம்!’ - உ.பி அனுப்பி வைக்கப்பட்ட 254 தொழிலாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு