Published:Updated:

`நீதி கிடைக்குமா.. என்ன உத்தரவாதம்?'- மாணவியின் கேள்வியால் மிரண்ட உ.பி போலீஸ்

சத்யா கோபாலன்

உன்னாவ் சிறுமி பற்றி ஒரு பள்ளி மாணவி, காவலர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

கேள்வி கேட்ட மாணவி
கேள்வி கேட்ட மாணவி

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம், உன்னாவ் பகுதியில் நடந்த வன்கொடுமை வழக்கில் சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த வழக்கில் முதலில் உன்னாவ் சிறுமியின் தந்தை மர்மான முறையில் உயிரிழந்தார். கடந்தவாரம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்படுத்திய லாரி
விபத்து ஏற்படுத்திய லாரி

சிறுமி பயணித்த கார் மீது மோதிய லாரி தவறான திசையில் வந்துள்ளது. மேலும், லாரியின் எண் கறுப்பு நிற பெயின்டால் மறைக்கப்பட்டது. இதனால், `சிறுமிக்கு நடந்தது விபத்து இல்லை கொலையாக இருக்கலாம்' என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரபங்கி என்ற நகரில் இருக்கும் ஒரு பள்ளியில் மாணவிகளுக்கான பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மாணவிகள், காவல் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டனர். அதில், ` உங்களுக்கு ஏதேனும் அநீதி நேர்ந்தால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்” என மாணவிகள் முன் பேசினர்.

பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கை உடைந்தவர்கள் எத்தனை பேர்?- போலீஸுக்கு 10 ஆர்.டி.ஐ கேள்விகள்!

அப்போது குறுக்கிட்ட 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், ` எங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் எனச் சொல்கிறீர்கள். இதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவளுக்கு நடந்த விபத்தின்போது லாரி எண் கறுப்பு நிற பெயின்டால் மறைக்கப்பட்டிருந்தது. அது விபத்து இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஒரு சாதாரண பெண் பாதிக்கப்பட்டவராகவும் அவருக்கு எதிரில் இருப்பவர் ஆளுமை நிறைந்தவராகவும் இருந்தால் இதுதான் நடக்கும்.

மாணவிகளிடம் பேசிய காவலர்
மாணவிகளிடம் பேசிய காவலர்

எங்களுக்கு ஏதேனும் நடந்து அதற்கு எதிராகப் போராடினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என நன்றாகத் தெரியும். ஒருவேளை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதில் எந்தப் பயனும் இருக்காது. பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் இருக்கும்போது எப்படிப் போராட முடியும். அதையும் மீறி நாங்கள் போராடினால் உறுதியாக நீதி கிடைக்குமா. எங்கள் பாதுகாப்புக்கு எப்படி உத்தரவாதம் அளிப்பீர்கள். எங்களுக்கு எதுவும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?' எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவி தன் கேள்வியை முடித்த பிறகு அந்த அரங்கம் முழுவதும் கைதட்டல்களால் நிறைந்தது. அனைவரும் மாணவியைப் பாராட்டினர். ஆனால், மாணவியின் கேள்விக்கு காவல் அதிகாரிகளால் எந்தப் பதிலும் அளிக்கமுடியவில்லை.