Published:Updated:

`அவர்கள் குழந்தைகள்..!’ -மாணவர்களுக்காக ராஜஸ்தானுக்கு 300 பேருந்துகளை அனுப்பிய உ.பி

பேருந்து
பேருந்து

ஊரடங்கு காரணமாக ராஜஸ்தானில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்துவர 300 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை தங்களது சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும்பொருட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு 300 பேருந்துகளை ராஜஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. மாணவர்களை அழைத்துச்செல்வதற்காக ஊரடங்கு காலத்தில் உத்தரப்பிரதேச அரசுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கியுள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஏராளமான கோச்சிங் சென்டர்களும் கல்வி நிறுவனங்களும் உள்ளன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இந்த கோச்சிங் சென்டர்களில் பயின்று வருகின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு படையெடுக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக பிற மாநில மாணவர்கள் இங்கு சிக்கித்தவித்து வருகின்றனர். இதையடுத்து ராஜஸ்தான் அரசு, `மாணவர்களை அழைத்துச் செல்ல அந்தந்த மாநிலங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்’ என அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்துதான் உத்தரப்பிரதேச அரசு ஆக்ராவிலிருந்து 200 பேருந்துகளையும் ஜான்சியிலிருந்து 100 பேருந்துகளையும் கோட்டாவுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள், ``கோட்டாவில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை அழைத்து வர இங்கிருந்து பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் வாட்டர் பாட்டில்கள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாஸ்க் மற்றும் கிருமிநாசினிகளை அனுப்பியுள்ளோம். ஒவ்வொரு பேருந்திலும் 25 மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாகச் சாடியுள்ளார். `மாணவர்களை அழைத்துச் செல்ல சலுகைகள் அளித்தால் ஊரடங்கு உத்தரவுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் அரசு தரப்பிலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ``நீங்கள் மாணவர்களை வெளியேற அனுமதித்தால், எந்த அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள உத்தரப்பிரதேச அதிகாரிகள், ``ராஜஸ்தானில் சிக்கியிருப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் அனைவரும் மைனர். இதன்காரணமாக இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு