Published:Updated:

`நிச்சயம் பண்ணுன தேதியில கல்யாணம் நடந்தே தீரும்!’- 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்

திருமணம்
திருமணம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று திருமணம் செய்துள்ளார்.

`எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு’ 90-ஸ் கிட்ஸ் மைண்ட்ல இந்தப் பாட்டு ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க `அதுவெறும் கனவு முருகேசா’ என்ற ரேஞ்சில் கொரோனா களேபரம் செய்துகொண்டிருக்கிறது. என்ன நடந்தாலும் பரவாயில்ல நிச்சயம் பண்ணுன தேதியில கண்டிப்பா கல்யாணம் செஞ்சே தீருவேன்னு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்கு பிரஜாபதி என்ற இளைஞர் 100 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். சிங்கிளா போனா நம்ம கல்கு ரிட்டர்ன் வரும்போது மனைவியை அதே சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

சைக்கிள்
சைக்கிள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்கு பிரஜாபதி (வயது 23) மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கி ஆகிய இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 25-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

1,400 கிலோமீட்டர்; 4,500 ரூபாய் சைக்கிள், சூரத் டு உ.பி - நம்பிக்கையுடன் பெடல் போடும் தொழிலாளர்கள்

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருமணத்துக்காக மாவட்ட காவல்துறையினரின் அனுமதி கோரியுள்ளார். திருமண தேதி நெருங்கிய போதும் அனுமதி கிடைத்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து, மணமகள் வீட்டாரை அழைத்த கல்கு நான் சைக்கிளில் வந்துவிடுகிறேன் திருமண வேலைகளை கவனியுங்கள் எனக் கூறியுள்ளார். சைக்கிளிலே சென்று தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கரம்பிடித்துள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கு

இதுகுறித்து பேசியுள்ள கல்கு பிரஜாபதி, ``திருமணத்துக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தோம். எங்களுக்கு அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. எனக்கு வேறு வழிதெரியவில்லை, அதனால் சைக்கிளில் சென்றுவிடலாம் என முடிவு செய்தேன். பைக் இருக்கிறது; ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. அதனால் சைக்கிள் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். எனக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டேன். உறவினர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்துகொண்டு சென்றேன்.

`லாக்டெளன்... ஆடம்பரக் காரில் டிரைவ்!’ - இளைஞருக்கு விநோத தண்டனை கொடுத்த ம.பி போலீஸ்

திருமணத்துக்கான அழைப்பிதழ் அடித்துவிட்டோம். மற்ற ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எங்களது திருமணம் ஒரு கிராமத்துக் கோயிலில் நடந்தது. சாதாரண உடையில்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். முக்கியமான சில சடங்குகள் செய்து திருமணத்தை எளிமையாக நடத்தினோம். இந்த லாக்டெளன் முடிந்ததும் உறவினர்களை அழைத்து மற்ற சடங்குகள், விருந்து உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும் என் மனைவியை அழைத்துக்கொண்டு சைக்கிளில் திரும்பினேன். இரண்டு பேர் சைக்கிளில் வருவது சற்று கடினமானதாக இருந்தது. என் கால்களுக்கு இவ்வளவு வலி இருக்கும் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. வலியைப் போக்க மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

திருமணம்
திருமணம்

எங்கள் திருமணம் முடிந்ததில் இருவீட்டாருக்கும் மகிழ்ச்சி. வீட்டில் தேவையில்லாத சில பிரச்னைகள் எழுந்ததால் திருமணத்தை உடனே நடத்த வேண்டியே கட்டாயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அவரால் சமையல் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இங்கு உதவி செய்வதற்கு கூட இங்கு யாரும் இல்லை. அதுமட்டுமல்லாமல் அரசானது லாக்டெளனை எத்தனை நாள்களுக்கு நீட்டிக்கும், இது எப்போது முடிவுக்கு வரும் என்ற விவரம் தெரியவில்லை. அதனால்தான் இவ்வளவு சிரமப்பட்டு திருமணம் செய்யவேண்டியிருந்தது” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு