Published:Updated:

`குழந்தையைப் புதைக்கச் சென்ற இடத்தில் உயிருக்குப் போராடிய இன்னொரு சிசு’ - உ.பி அதிர்ச்சி

``குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்குக் குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே தேவைப்படுவதால், சிசு உயிர்பிழைத்திருக்கிறது.”

குழந்தை
குழந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர், ஹிதேஷ்குமார் சிரோஹி. இவருக்குப் பிறந்த குழந்தை சில நிமிடங்களிலே இறந்துபோக, மனவேதனை அடைந்தார். பின்னர், அந்த சிசுவைப் புதைக்க அருகிலுள்ள இடுகாட்டுக்குச்சென்று குழந்தையைப் புதைக்க குழி தோண்டியுள்ளார். அந்தக் குழிக்குள், மண் பானையில் இன்னொரு சிறு வயதுக் குழந்தை உயிரோடு இருந்திருக்கிறது. குழிக்குள் இருந்த அந்தக் குழந்தை மூச்சுவிடுவதைக் கண்டதும், ஹிதேஷ்குமார் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டுசென்றுள்ளார்.

குழந்தை
குழந்தை

அந்தக் குழந்தை ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் உதவியுடன் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறது. இது தொடர்பாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் பேசிய மருத்துவர்கள், ``குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை பிறந்திருக்கலாம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே தேவைப்படுவதால், சிசு உயிர்பிழைத்திருக்கிறது. சில மணி நேரத்துக்கு முன் அந்தக் குழந்தை புதைக்கப்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தனர். பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மித்ரா, குழந்தைக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஓடும் ஜீப்பில் தவறிவிழுந்த குழந்தை; பேய் எனப் பதறிய வனத்துறை! -மிரளவைத்த கேரள செக்போஸ்ட் காட்சிகள்

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய பரேலி எஸ்.பி அபினந்தன் சிங், ``பேரலியைச் சேர்ந்த துணை ஆய்வாளர்தான் ஹிதேஷ்குமாரின் மனைவி வைஷாலி. கடந்த புதன்கிழமை அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து, சிரோஹி தன் சிசுவைப் புதைக்கச் சென்றுள்ளார். குழந்தையைப் புதைக்க அவர் குழி தோண்டியபோது, அந்த குழிக்குள் இன்னொரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. சுமார் 3 அடிக்குக் கீழ் அந்தக் குழந்தை மண் பானைக்குள் இருந்தது. அந்தக் குழந்தை, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்த குழந்தையின் உயிரை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். தற்போது அதன் பெற்றோர் குறித்து விசாரித்துவருகிறோம்” என்றார்.

குழந்தை
குழந்தை

இதுதொடர்பாக ஹிதேஷ்குமார் கூறுகையில், ``ஆரம்பத்தில்,என் குழந்தைதான், உயிர்பிழைத்து அழுகிறது என நினைத்தேன். ஆனால், அந்தக் குரல் ஒரு பானையிலிருந்து வந்தது. அந்தப் பானையைப் பார்த்தபோது, அதில் பெண் குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்புகொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தேன். அதேபோல போலீஸுக்கும் தகவல் தெரிவித்தேன். அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது” என்றார்.