Published:Updated:

`குற்றச்சாட்டில் உண்மையில்லை!' - 12 ஆண்டுகள் சிறைக்குப் பின் விடுவிக்கப்பட்ட தொழிலாளி

குலாப் கான்
குலாப் கான்

`எனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாததும் அவரது முகத்தைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போனது பெரும் வலியைக் கொடுக்கிறது' என சொல்லியிருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குலாப் கான்.

கடந்த 2008ம் ஆண்டின் முதல் நாளில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எஃப் கேம்ப் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 7 வீரர்கள் மற்றும் அந்தப் பகுதியில் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்திவந்த ஒருவர் என 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு கடந்த 11 வருடங்களாக ராம்பூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

அ.தி.மு.க பெண் பிரமுகர், மகனைக் கொல்ல ஸ்கெட்ச்!- அண்ணாசாலையைப் பதறவைத்த  வெடிகுண்டு வீச்சு

இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை முடிந்து ராம்பூர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங், கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடைய முகமது ஷாரிப், இம்ரான், முகமது பரூக் மற்றும் சபாவுதீன் ஆகியோருக்குத் தூக்குதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஐந்தாவது குற்றவாளி ஜங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்தக் குற்றத்துக்காக ஃபஹீம் அன்சாரி என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த குலாப் கான் மற்றும் கௌசார் பரூகி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஏறக்குறைய 12 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட அந்த இருவரும் பரேய்லி மத்திய சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். குலாப் கான், ராம்பூரில் வெல்டிங் கடை வைத்து நடத்திவந்தார். தாக்குதலுக்கு உதவியதாக அவர் மீது குற்றம்சாட்டிய தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், கடந்த 2008ம் ஆண்டு அவரைக் கைது செய்தனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

30 வயதில் கைது செய்யப்பட்ட குலாப் கான், 42 வயதில் விடுதலையாகியிருக்கிறார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசிய குலாப் கான், ``தீவிரவாதத் தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இருந்தும் என்மீது குற்றம்சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டபோது, என்னோடு சேர்த்து எனது குடும்பத்தினரின் வாழ்வும் சிதைக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். தீவிரவாதம் தொடர்பான வழக்கில் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்ற எண்ணம் கொடூர அச்சத்தைத் தரக் கூடியது. கடந்த காலங்களில் கடும் மன அழுத்தத்துக்கு நான் ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம், மாரடைப்பு ஏற்பட்டு நான் இறந்துபோவேன் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். விடுதலையாகி சிறைச்சாலைக்கு வெளியே நான் முதல் அடி எடுத்துவைத்த போது கடவுளுக்கு நன்றி சொன்னேன். எனது வாழ்வைப் புதிதாகத் தொடங்க இருக்கிறேன்'' என்றார்.

கைது செய்யப்பட்ட நாள்கள் குறித்து நினைவுகூர்ந்த அவர், ``கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி போலீஸார் என்னைக் கைது செய்தனர். காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் விருந்தினர் மாளிகை ஒன்றுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு மாலை வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். `எதற்காகக் கைது செய்தீர்கள்?' என போலீஸாரிடம் கேட்டபோது, `சிறைக்குச் சென்றபிறகு அறிந்துகொள்வாய்' என்பதே பதிலாகக் கிடைத்தது. பிறகு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்தநாள் மருத்துவப் பரிசோதனை முடிந்து, சிறையில் அடைக்கப்பட்டேன். அதன்பிறகு 3 மாதங்கள் கழித்தே எனது குடும்பத்தினரை என்னால் சந்திக்க முடிந்தது'' என்று கண்ணீர் வடித்தார். குலாப் கான் சிறையில் அடைக்கப்பட்டபின்னர் அவரது மனைவி, தையல் பணி செய்து அவர்களது 3 குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார்.

`நீட் ஏஜென்ட் ரஷீதைத் தேடும் சி.பி.சி.ஐ.டி!’ - ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒருவர் கைது
கைது
கைது

சிறையில் இருந்தபோது தனது குடும்பம் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறும் குலாப் கான், ``எனது பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனது தாய், அத்தை ஆகியோரை நான் இழந்துவிட்டேன். `எனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாததும் அவரது முகத்தைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போனது பெரும் வலியைக் கொடுக்கிறது'' என்று வேதனை தெரிவித்தார். மனிதாபிமான அடிப்படையில் அரசு தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குலாப் கான், தனது சொந்த ஊரான பஹேரிக்குச் சென்றவுடன், அவருக்கு மக்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். அதேபோல், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு நபரான முகமது கௌசார், உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர்க் பகுதியைச் சேர்ந்தவர்.

அடுத்த கட்டுரைக்கு