Published:Updated:

`காஸ் சிலிண்டர்; தக்காளி; பதாகைகள்; தொப்பி!’ -உ.பி சட்டமன்றத்தைக் கதிகலங்கவைத்த எதிர்க்கட்சிகள்

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தின் பட்ஜெட் கூட்டத்தில் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துச் சட்டங்களும் அந்த மாநிலத்தில் முதலில் அமல்படுத்தப்பட்டுவிடும். இதன் காரணமாகவே உத்தரப்பிரதேசத்தின் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது கடுமையான பனிப்போர் நடைபெறுவது வழக்கம். குடியுரிமை திருத்தச் சட்டம், அதற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற பல்வேறு பிரச்னைகள் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

உத்தரப்பிரதேச சட்டமன்றம்
உத்தரப்பிரதேச சட்டமன்றம்

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த வருடத்துக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் அனைவரும் எப்போதும்போல அமைதி காத்திருந்தனர். சில நடைமுறைகள் முடிந்து ஆளுநர் ஆனந்திபென் படேல் தன் உரையைத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அதை எதிர்த்த எதிர்க்கட்சிகள், தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, சட்டமன்றக் கூடத்தின் மத்தியப் பகுதிக்கு வந்து ஆளும்கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

`ஒருவருக்கு நடந்ததுதான் அனைவருக்கும்!’ -சொந்தக் கட்சிக்கு எதிராகத் திரண்ட உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சிவப்பு நிற தொப்பி அணிந்துகொண்டும் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர். இந்தச் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை என்றும் கோஷமிட்டனர்.

இது மட்டுமல்லாமல் சில எம்.எல்.ஏ-க்கள் எல்.பி.ஜி சிலிண்டர்களைத் தங்கள் முதுகில் சுமந்துகொண்டு காஸ் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சியினர் இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்தால் மொத்த சட்டப்பேரவையும் சில மணிநேரங்கள் தலைகீழாக மாறியிருந்தது. அங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைதியாக அமர்ந்திருந்தார்.

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியிலும் பதாகைகள் ஏந்தியபடி எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்தினர். வெங்காயம், தக்காளி போன்றவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தங்களுக்கு அருகிலிருந்த மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தக்காளியை இலவசமாக வழங்கி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்தக் கூட்டத்தில் மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு