Published:Updated:

பிரியங்காவின் உடையைப் பிடித்து இழுத்த விவகாரம்... மன்னிப்பு கேட்டது உ.பி காவல்துறை!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி ( Twitter /@INCUttarPradesh )

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது காவலர்கள், பிரியங்கா காந்தியின் உடையைப் பிடித்து இழுத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து காவலர்கள் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவமும் இறந்த பெண்ணின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவசர அவசரமாக உ.பி போலீஸாரே தகனம் செய்த சம்பவமும் மொத்த நாட்டையும் உலுக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு மூலைகளிலும் அரசியல் கட்சியினரும் பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

இந்நிலையில் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உ.பி கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கடந்த வெள்ளிக்கிழமை ஹத்ராஸ் செல்ல முயன்றனர். ஆனால், ஹத்ராஸில் இருந்து 100 கி.மீட்டருக்கு முன்னதாகவே அதாவது, கிரேட்டர் நொய்டாவிலேயே ராகுலும் பிரியங்காவும் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது காவலர்களை மீறி சாலையில் நடந்து செல்ல முயன்ற ராகுல் காந்தி போலீஸாரால் தள்ளிவிடப்பட்டதாக காங்கிரஸார் குற்றம் சாட்டினர். பின்னர், 144 தடை உத்தரவை மீறிச் சென்றதால் ராகுலும் பிரியங்காவும் கைது செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். ராகுல் காந்தி கீழே விழுந்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?

இந்தப் பிரச்னை முடியும் முன்னரே உ.பி காவலர்கள் பிரியங்காவிடம் மோசமாக நடந்துகொண்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. இரண்டு நாள் ஊரடங்குக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை ஹத்ராஸ் எல்லை திறக்கப்பட்டது. முன்னதாக பத்திரிகையாளர்கள் மட்டும் ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். என்னதான் எல்லை திறக்கப்பட்டாலும் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் காங்கிரஸ் எம்.பி மற்றும் தொண்டர்களுடன் ராகுலும் பிரியங்காவும் மீண்டும் ஹத்ராஸ் செல்ல முயன்றனர். இவர்கள் ஹத்ராஸ் செல்லும் தகவல் கிடைத்ததும், டெல்லி - உ.பி எல்லையான நொய்டா சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Twitter /@INCUttarPradesh

ராகுல், பிரியங்காவின் வாகனம் நொய்டா சாலையில் வந்தபோது முதலில் காவலர்கள் அதைத் தடுத்து நிறுத்தினர், இதை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தைக் கலைக்க கௌதம் புத்தா பகுதி காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதைக் கவனித்த பிரியங்கா காந்தி, உடனடியாகக் கூட்டத்தில் புகுந்து காவர்களின் லத்தியைப் பிடித்து காங்கிரஸ் தொண்டர்களைத் தாக்கக் கூடாது என்று காவலர்களை எச்சரித்தார். இந்தச் சலசலப்பில் காவலர்கள், பிரியங்காவின் உடையைப் பிடித்து இழுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நால்வருக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினர் நடத்திய பஞ்சாயத்து... ஹத்ராஸில் என்ன நடக்கிறது?

பெண் என்றும் பார்க்காமல் காவலர்கள், பிரியங்காவின் உடையைப் பிடித்து இழுத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க விஷயம் எனப் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரியங்கா காந்தியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற்கு உத்தரப்பிரதேச போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

ராகுல் - பிரியங்கா
ராகுல் - பிரியங்கா
Twitter /@INCUttarPradesh

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், `மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்போது பிரியங்கா காந்தியுடன் நடந்த சம்பவத்துக்கு நொய்டா காவல்துறை வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது. நாங்கள் பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சம்பவத்தை அறிந்த உ.பி காவல்துறை துணை ஆணையர் இது தொடர்பாக மூத்த பெண் அதிகாரி ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைக் காக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என மாவட்ட போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பிரியங்கா உயிரிழந்த பெண்ணின் தாயை அரவணைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் அதிகக் கவனம் பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு