Published:Updated:

`ஹெல்மெட் அணியாத பிரியங்கா; வாகன உரிமையாளருக்கு அனுப்பப்பட்ட செல்லான்!’- அதிரடி காட்டும் உ.பி போலீஸ்

பிரியங்கா பயணம் செய்த இருசக்கர வாகன உரிமையாளருக்கு அபராதம் விதித்து செல்லான் அனுப்பியுள்ளது உத்தரப்பிரதேச போக்குவரத்து போலீஸ்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர் தாராபுரி அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரைச் சந்திக்க நேற்று முன் தினம் மாலை சென்றுள்ளார் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி செல்வதை அறிந்த காவல்துறையினர் அவரது காரை வழிமறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகும் பிரியங்கா அனுமதிக்கப்படாததால் அவர் காரைவிட்டு இறங்கி சிறிது தூரம் தன் தொண்டர்களுடன் சாலையில் நடந்துசென்றார். பின்னர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது காவலர்கள், பிரியங்காவைத் தடுத்துள்ளனர். இறுதியாக 30 நிமிடங்களில் 2 கி.மீ தூரத்தை இருசக்கர வாகனத்தில் கடந்து ஒரு வழியாக தாராபுரியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார் பிரியங்கா.

உத்தரப்பிரதேச போலீஸார், பிரியங்காவைத் தடுத்த சம்பவம் அம்மாநிலம் மற்றும் காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். பின்னால் வந்த காவல்துறையினர் என்னை வழிமறித்தனர். ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னைக் கழுத்தைப் பிடித்து இழுத்தார். இன்னொருவர் என்னைக் கீழே தள்ளிவிட்டார்’ எனப் பிரியங்கா குற்றம் சுமத்தியிருந்தார். உ.பி போலீஸின் செயலுக்குத் தேசிய காங்கிரஸ் உட்பட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என உ.பி போலீஸார் தெரிவித்துள்ளனர். ``லக்னோவில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அவரிடம் நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. என் கடமையை மட்டுமே செய்தேன். இந்தச் சம்பவத்தின்போது நானும் கஷ்டப்பட்டேன்” என பிரியங்காவைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் பெண் சர்க்கிள் அதிகாரி அர்ச்சனா சிங் கூறியுள்ளார்.

`அந்த வீடியோவை நன்றாகப்  பாருங்கள்!’- பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்ட பின்னணியை விவரித்த உ.பி போலீஸ்

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பிரியங்காவும் அவரது ஓட்டுநராக இருந்த காங்கிரஸ் நிர்வாகியும் ஹெல்மெட் அணியவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த நிலையில், பிரியங்கா பயணம் செய்த வாகன உருமையாளருக்கு உத்தரப்பிரதேச போக்குவரத்துப் போலீஸார் ரூ. 6,100 அபராதம் விதித்து இணைய வழி செல்லான் அனுப்பியுள்ளனர்.

செல்லான் அனுப்பிய விவகாரம் பற்றிப் பேசியுள்ள உ.பி போக்குவரத்துத் துறை கண்காணிப்பாளர் பூர்னேந்து சிங், ``சமூகவலைதளங்களில் வைரலான புகைப்படங்கள் மூலம் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததை நாங்கள் உறுதி செய்தோம். நீண்ட சோதனைக்குப் பிறகு வண்டி ஓட்டியவர் தீரஜ் குர்ஜார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வண்டியின் எண் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அதன் உரிமையாளருக்கு இணைய வழி செல்லான் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

பிரியங்கா பயணித்த இருசக்கர வாகனத்தை ஓட்டியது தீரஜ் குர்ஜாராக இருந்தாலும் அதன் உரிமையாளர் ராஜ்தீப் சிங் என்ற மற்றொருவர். தற்போது அவருக்குத்தான் உத்தரப்பிரதேச போலீஸார் செல்லான் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.