Published:Updated:

உ.பி கொடூரம்:`என் மகனைக் கொன்றுவிடுங்கள்!’ - காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடியின் தாய்

தூபேயின் தாய் சர்லா தேவி
தூபேயின் தாய் சர்லா தேவி

``எங்களுடைய குடும்பத்துக்குத் தொடர்ந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறான். நான் நான்கு மாதங்களாக அவனை சந்திக்கவில்லை” - தூபேயின் தாய் சர்லா தேவி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் பிக்ரூ என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான விகாஸ் தூபே என்ற ரவுடி மீது கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தூபே செய்த கொலை முயற்சி ஒன்று தொடர்பாக சவுபேர் சரக காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இதனிடையே, பிக்ரூ கிராமத்தில் தூபே பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரைப் பிடிக்க காவலர்கள் சென்றுள்ளனர்.

முன்னதாகவே இதை அறிந்த தூபே உள்ளிட்ட ரவுடிகள், அதிகாரிகள் குழு கிராமத்துக்குள் நுழைந்த உடன் அவர்கள் மீது கடுமையாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா, மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 கான்ஸ்டபிள்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பின்னர், தாக்குதல் நடத்திய அனைத்து ரவுடிகளும் அக்கிராமத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். தற்போது, அவர்களைப் பிடிக்க கூடுதல் சிறப்புப் படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உ.பி காவலர்கள் கொலை
உ.பி காவலர்கள் கொலை
ANI

மிகவும் கொடூரமான ரவுடியாகக் கருதப்படும் விகாஸ் தூபேயின் தாய் சர்லா தேவி தன் மகனைப் பற்றிப் பேசுகையில், ``காவல்துறையினரின் முன்பு அவன் சரணடைய வேண்டும். அவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் காவலர்கள் அவனை என்கவுன்டரில் கொல்லக்கூடும். காவல்துறை அதிகாரிகள் அவனைப் பிடித்தாலும் அவனைக் கொன்றுவிடுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.

அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவலர்களைக் கொல்வதன் மூலம் அவன் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளான். தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன். அவன் வெளியே வந்து காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இல்லையெனில், காவலர்கள் அவனை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள். அவன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

உ.பி கொடூரம்: `நள்ளிரவில் திடீர் தாக்குதல்’ -8 காவலர்களை  சுட்டுக்கொன்ற ரவுடிகள்

விகாஸ் தூபே அரசியல்வாதிகள் சிலருடன் தொடர்பில் இறங்கிய பிறகே குற்றச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினான் என்று தொடர்ந்து பேசிய சர்லா தேவி, ``அவன் சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற விரும்பினான். ராஜ்நாத் சிங் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லாவை அவன் சுட்டுக்கொன்றான். அவன் எங்களுடைய குடும்பத்துக்கு தொடர்ந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறான். நான் நான்கு மாதங்களாக அவனைச் சந்திக்கவில்லை.

எனது இளைய மகனுடன் லக்னோவில் வசித்து வருகிறேன். அவனால் நாங்கள் அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அவனை நினைத்து வெட்கப்படுகிறோம்” என்றும் கூறினார்.

விகாஸ் தூபே இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என கான்பூர் ஐ.ஜி மோகித் அகர்வால் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

பிக்ரூ கிராமத்தில் ரவுடிகளின் தாக்குதலால் இறந்த காவல்துறை அதிகாரிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவர்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாகப் பேசிய டி.ஜி.பி அவஸ்தி, `` ரவுடி தூபேவை பிடிக்கும் ஆபரேஷன் இன்னும் முடியவில்லை. இருட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, தூபே இந்தக் கொடூர சம்பவத்தைச் செய்துள்ளார். சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ரவுடி தூபே விரைவில் கைது செய்யப்பட்டு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி அதிர்ச்சி: குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள்! - உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை
அடுத்த கட்டுரைக்கு