Published:Updated:

`ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; 13 மாதம்; ரூ.1 கோடி சம்பளம்?’ - உ.பியை அதிரவைத்த ஆசிரியை

ஆசிரியை
ஆசிரியை ( மாதிரிப் புகைப்படம் )

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை ஒரே நேரத்தில் 25 பள்ளிகளிலிருந்து சம்பளம் பெற்றுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண் குழந்தைகளுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசுப் பள்ளி அனைத்து மாவட்டங்களிலும் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அப்படி மெயின்புரி நகரில் இருக்கும் பள்ளியில் முழு நேர அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்துள்ளார் அனாமிகா சுக்லா. இதே போல் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் கஸ்தூரிபா பள்ளியில் ஆசிரியை அனாமிகா பணி செய்வதாகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி
பள்ளி

சமீபத்தில் அங்கு `மனவ் சம்பதா’ என்ற திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த தரவுகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அப்போதுதான் அனாமிகா பற்றிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் கடந்த 13 மாதங்களாக 25 பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார். இந்த விவகாரம் பற்றிப் பேசியுள்ள உத்தரப்பிரதேசத்தின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த், ‘இத்தனை பள்ளிகளிலிருந்து தனக்கு ஒரு கோடி ரூபாய் வரை ஊதியம் வந்துள்ளதை ஒரு ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அது அவரின் கடமை.

அதுமட்டுமல்லாது அந்த 25 பள்ளிகளிலும் அனாமிகா வருகைப் பதிவை ஆன்லைன் மூலம் தவறாமல் செய்து வந்துள்ளார். இது மிகப் பெரிய மோசடி. இவ்வாறு எப்படி நடந்தது என்பதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். மோசடியின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யவில்லை. ஒருவேளை மோசடி நடந்தது அதிகாரபூர்வமாக உறுதியானால் அந்த ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அனாமிகா வேலை செய்யும் மெயின் நகர் பள்ளியில் அவருக்கு ரூ.30,000 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஒரே வங்கிக் கணக்கின் மூலம் சம்பளம் பெற்றுள்ளார். ஆசிரியர்களுக்கான சம்பளப் பரிவர்த்தனை இணையத்தில் நடந்ததால் இத்தனை நாளாக இந்த மோசடி தெரியாமல் இருந்துள்ளது.

மோசடி
மோசடி

``ஆசிரியை அனாமிகா குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னும் தன் தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நேரில் சென்று விசாரணை நடத்தமுடியவில்லை. ஆனால் அனாமிகா தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அவருக்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ஆசிரியை மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர் மீதும் அவருக்கு உறுதுணையாக யாரேனும் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அம்மாநிலப் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு