Published:Updated:

`நின்றுகொண்டே லாரியில் பயணம்; நண்பனின் மடியில் பிரிந்த உயிர்!’ - லாக் டெளன் சோகம்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

`யாகூப்புக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அம்ரித்துக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை’.

கொரோனா ஊரடங்கு வேலையிழந்து நண்பனுடன் ஊர் திரும்பிய யாகூப், மருத்துவமனை வாசலில் நண்பனின் சடலத்தை வாங்குவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். யாகூப் முகமது , அம்ரித் குமார் இருவரும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிழைப்புத் தேடி சூரத் வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலையில்லை. கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியதையடுத்து இருவரும் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்துள்ளனர். ஒரு லாரியில் 4,000 ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுள்ளனர். அதிகமான கூட்டம் இருந்ததால் உட்காருவதற்கு கூட வழியில்லை நின்றுகொண்டே பயணமாகியுள்ளனர்.

லாக் டெளன்
லாக் டெளன்

நண்பர்கள் இருவரும் பயணம் செய்த வாகனம் மத்தியப்பிரதேச தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது அம்ரித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடையத் தொடங்கியது. அம்ரித்துக்கு கொரோனா நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிட்டதோ என யாகூப் பயந்தார். அந்த வாகனத்தில் இருந்த அனைவருக்கும் அதே அச்சம். அதனால் வேறு வழியின்றி அம்ரித்தை நடுவழியில் இறக்கிவிட முடிவு செய்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலம்! - அதிர்ச்சியில் குடும்பத்தினர்

யாகூப்புக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அம்ரித்துக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்து யாருக்கும் கவலையில்லை. வேறுவழியின்றி தன் நண்பனுடன் யாகூப் வாகனத்தைவிட்டு இறங்கினார். வண்டியை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் அம்ரித் மயக்கமடைந்துள்ளார். தன் நண்பனை மடியில் சாய்த்துக்கொண்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். வாகனத்தில் சென்றவர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. சிலர் எடுத்து பதிவிட்ட புகைப்படம் மட்டும் சமூகவலைத்தளத்தில் வட்டமடிக்கத் தொடங்கியது,

Representational Image
Representational Image

கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்தார். இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் மாவட்ட மருத்துவமனைக்கு அம்ரித்தை கொண்டுசென்றனர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததையடுத்து உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்ரித் உயிரிழந்துள்ளார். நண்பனை மடியில் கிடத்தியவாறே யாகூப், உதவிகேட்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு