Published:Updated:

`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ!’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates

ட்ரம்ப்
ட்ரம்ப்

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

25 Feb 2020 6 PM

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியுடன் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தனியாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அதில் பேசிய ட்ரம்ப், ``எங்களுக்கு அற்புதமான சந்திப்பும் நேரமும் கிடைத்தது. இது மிகப்பெரிய நாடு. எப்போதும் அவர்கள் விரும்புவதைவிட அதிகமாகவே எங்களை நேசித்துள்ளனர். எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகப்பெரிய உறவு இருக்கிறது. தலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மோடியுடன் பேசியுள்ளேன். இதைப் பார்க்க இந்தியா விரும்புகிறது என நினைக்கிறேன். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, ``மத சுதந்திரம் குறித்தும் நாங்கள் பேசியுள்ளோம். மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைக்கிறார். தனிமனித தாக்குதல்கள் குறித்து கேள்விபட்டேன். ஆனால், இதுகுறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இது இந்தியாவின் பிரச்னை” என்றவர் சி.ஏ.ஏ குறித்தும் பேசவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுடனான பிரச்னைகள் பற்றி நிறைய பேசினோம் என்ற ட்ரம்ப், ``இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நிச்சயமாக என்னால் உதவ முடியும் என்று கூறினேன். காஷ்மீர் கண்டிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள மிகப்பெரிய பிரச்னை. அவர்கள் அதனை தீர்க்க தேவையானவற்றை செய்து வருகின்றனர். ``உலகின் மிகப்பெரிய சந்தை மதிப்பாக இந்தியா திகழ்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிகமான இறக்குமதி வரி விதிப்பது குறித்தும் மோடியுடன் பேசினேன்” என்றும் தெரிவித்தார்.

25 Feb 2020 3 PM

``ராணுவ பலம்... 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்!’’-

`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ!’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates

இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் வர்த்தகம், பொருளாதாரம், ராணுவம், தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் ட்ரம்ப் மற்றும் மோடி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய மோடி, ``இன்று நாங்கள் இந்திய அமெரிக்க உறவில் இருக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்பு, எனர்ஜி, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பாக விவாதித்தோம். பாதுகாப்புத்துறையில் இந்தியா அமெரிக்கா இடையே உறவு பலமாகியுள்ளது.

இந்தியா அமெரிக்கா இணைந்து தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு, அவர்களின் பொறுப்பை உணர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. இருநாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வர்த்தம் தொடர்பான பேச்சுகளுக்கு சட்ட ரீதியான வடிவம் கொடுப்பது என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. பெரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறும்.

இந்திய அமெரிக்க உறவில் முக்கிய பங்காற்றுவது, மக்கள் தான். தொழில்வல்லுனர்கள், மாணவர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என பலரின் பங்களிப்பும் இந்த உறவின் முக்கியம் அம்சம்” என்றார்.

`ஹார்லி டேவிட்சன் டு சி.ஏ.ஏ!’ - செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் #LiveUpdates

பின்னர் பேசிய ட்ரம்ப், ``நானும் எனது மனைவி மெலனியாவும் இந்திய மக்களின் கம்பீரத்தினாலும், வரவேற்பினாலும் அசந்துபோனோம். மோடியுன் சொந்த மாநில மக்களின் வரவேற்பு மறக்க முடியாத ஒன்று.

முன்னதாக இன்று, இந்தியா அமெரிக்க இடையே சில ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்படி அமெரிக்காவின் நவீன ராணுவ கருவிகளை இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கவுள்ளது. இதில் அப்பாச்சி, எம்.ஹெச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்களும் அடங்கும். இவை உலகின் தலைசிறந்த போர் ஹெலிகாப்டர்கள். இது இந்திய அமெரிக்க ராணுவத்தின் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.

மோடியுடனான் பேச்சுவார்த்தையில் நமது நாட்டு மக்களை இஸ்லாமிய தீவிரவாத சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத சக்திக்கு எதிராக செயல்படும்.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பான 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் குறித்தும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம்” என்றார்.

25 Feb 2020 10 AM

ஜனாதிபதி மாளிகையில் ட்ரம்ப்!

ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை வரவேற்கும் மோடி
ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை வரவேற்கும் மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இந்தியப் பயணத்தின் இரண்டாவாது நாளான இன்று ஜனாதிபதி மாளிகை வந்தனர். அங்கு அவரை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வரவேற்றார். அவருடன் ராம் நாத் கோவிந்த் மனைவியும் இருந்தார். ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பில் இந்திய பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பின்னர் அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

25 Feb 2020 11 AM

`இது மிகப்பெரிய கௌரவம்!' - மகாத்மா காந்தி நினைவிடத்தில் நெகிழ்ந்த ட்ரம்ப்

டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

காந்தி சமாதியில் மரியாதை
காந்தி சமாதியில் மரியாதை

அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் ட்ரம்ப்,``அற்புதமான மற்றும் இறையாண்மைமிக்க இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் என்றும் துணைநிற்பார்கள். மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வை இதுதான். இது மிகப்பெரிய கௌரவம்'' என்று எழுதினார். ட்ரம்ப் - மெலனியா தம்பதியர் ராஜ்காட்டில் மரம் ஒன்றையும்நட்டனர்.

25 Feb 2020 8 AM

டெல்லியில் ட்ரம்ப்!

தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - மெலனியா தம்பதியர், முதலில் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர். பின்னர், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் நடைபெற்ற `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாலையில், உ.பி மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்வையிட்டனர்.

சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க முதல் தம்பதியுடன் பிரதமர் மோடி
சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க முதல் தம்பதியுடன் பிரதமர் மோடி
`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate

இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அவருக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கின்றன. அதேநேரம், அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா, டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அதிபர் ட்ரம்ப் இன்று இரவே அமெரிக்கா புறப்படுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு