Published:Updated:

`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate

நமஸ்தே ட்ரம்ப்
நமஸ்தே ட்ரம்ப்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்திருக்கிறார்.

24 Feb 2020 4 PM

`சச்சின், கோலி, பாலிவுட்!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், ``இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் உண்மையான நண்பனாக இருந்து வந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்னதாக இந்திய பிரதமர் மோடியை நாங்கள் அமெரிக்காவில் பிரமாண்டமான கால்பந்து மைதானத்தில் வைத்து வரவேற்றோம். இன்று இந்தியா என்னை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி.

இந்தியாவுக்கு எங்கள் இதயங்களில் எப்போதும் பெரும் இடம் உண்டு. மோடி, தனது வாழ்க்கையை டீ விற்பனை செய்பவராகத் தொடங்கினார். நான் சொல்கிறேன், அவரது வளர்ச்சியும் உழைப்பும் கடினமான ஒன்று. இந்த நாட்டின் மக்கள் அவரை விரும்புகின்றனர்.

இந்த நாட்டின் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுகின்றனர். சச்சின் முதல் கோலி வரை உலகத் தரமிக்க வீரர்கள் இங்கு உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்களை ரசிக்கிறார்கள். இந்த நாடு கிட்டத்தட்ட 2,000 படங்களை ஒவ்வோர் ஆண்டும் தயாரிக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத சக்திக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் போராடுகிறது. அதிநவீன ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது" என்றார். நாளை டெல்லியில் நடைபெறும் சந்திப்பில் இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

குஜராத் கூட்டத்தில் பேசிய பின்னர் ட்ரம்ப், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஆக்ரா புறப்பட்டார்.

Trump and First Lady arrive in Ahmedabad airport

Posted by RT on Sunday, February 23, 2020
24 Feb 2020 2 PM

இந்திய - அமெரிக்க உறவு குடும்ப உறவாக மாறியிருக்கிறது!

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி தொடங்கியது. சபர்மதி ஆசிரமத்தில் இருந்து சாலைமார்க்கமாக அகமதாபாத் மைதானம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சாலைநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அகமதாபாத் மைதானம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ஆகியோரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வரவேற்றனர். இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடி வரவேற்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், ``வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு எனது அமெரிக்கப் பயணத்தை `ஹவுடி மோடி’ நிகழ்ச்சி மூலம் நான் தொடங்கினேன். இப்போது எனது நண்பர் ட்ரம்ப், `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி மூலம் அவரது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு உங்களை (ட்ரம்ப்) நான் வரவேற்கிறேன். இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா உறவு அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. இந்திய - அமெரிக்கா இடையிலான உறவு குடும்ப உறவாக மாறியிருக்கிறது’’ என்று பேசினார்.

24 Feb 2020 12 PM

சபர்மதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப்!

காந்தி படத்துக்கு மரியாதை
காந்தி படத்துக்கு மரியாதை

தனி விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். அவரைக் கட்டித் தழுவி பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் சபர்மதி ஆசிரத்துக்குச் சென்றார். பிரதமர் மோடியும் அவருடன் சென்றார். அங்கு ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கதர் துண்டு அணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி படத்துக்கு பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் இணைந்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கிருந்த ராட்டையை ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ஆகியோர் இணைந்து சுற்றினர்.

24 Feb 2020 11 AM

அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர்; நேரில் வரவேற்ற மோடி!

இவங்கா ட்ரம்ப்
இவங்கா ட்ரம்ப்
ANI

தனி விமானம் மூலம் அகமதாபாத் வந்த ட்ரம்ப்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மத்திய அமைசர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர். ட்ரம்ப் வரவேற்கும் விதமாக விமான கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

24 Feb 2020 11 AM

அமெரிக்க அதிபரை வரவேற்கத் தயாராகும் அகமதாபாத்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும் அமெரிக்க ட்ரம்பை வரவேற்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்ட ட்ரம்ப், இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்.

`பாகுபலியாக அமெரிக்க அதிபர்..!'- இந்தியப் பயணத்துக்கு முன்பாக ட்ரம்ப் ரீ-ட்வீட் செய்த வீடியோ

இந்திய வருகை குறித்து ட்ரம்ப், இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார். அதில், இந்திய வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்ப்பை வரவேற்க, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார்.

ட்ரம்ப் விசிட்டால் இந்தியாவுக்கு என்ன ஆதாயம்? - ஓர் அலசல்

அங்கிருந்து சுமார் 22 கி.மீ தூரம் சாலை மார்க்கமாகப் பயணித்து சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், காந்தி வசித்த அறை உள்ளிட்டவற்றைப் பார்வையிடுகிறார். அதன்பின்னர், சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தில் நடைபெறும் `நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அவர் கலந்துகொள்கிறார். அகமதாபாத்திலிருந்து இன்று மாலை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா செல்லும் அவர், மனைவி மெலனியாவுடன் தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். ட்ரம்ப் வருகையையொட்டி தாஜ்மகாலில் சுற்றுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு