Published:Updated:

`காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குங்கள்’- இந்தியாவை வற்புறுத்தும் அமெரிக்கா

காஷ்மீர் விவகாரத்தில் அங்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Kashmir
Kashmir

ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப் பிரிவு 370, 35A ஆகியவை கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கப்பட்டன. மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

Kashmir
Kashmir

இதற்கு முன்னதாக அங்கு எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதே நேரம் பாகிஸ்தான் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தது. இதற்கிடையில், ‘இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்கி தலைவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

Alice Wells
Alice Wells
Wikipedia

இது தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்காவின் தெற்காசிய வெளியுறவுத்துறை அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells), “இந்திய அரசு, காஷ்மீரில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, தலைவர்களை விடுவித்து விரைவான நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதை நினைத்து அமெரிக்கா கவலைகொண்டுள்ளது.

`காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு நேருதான் காரணம்!’ - அமித்ஷா

இந்திய அரசு, காஷ்மீர் தலைவர்களுடன் அரசியல் ஈடுபாடு மேற்கொண்டு, உறுதியளித்ததுபோல் அங்கு தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கிறோம். காஷ்மீர் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய அதிபர் ட்ரம்பும் தயாராகவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

அமெரிக்காவில் நடந்துவரும் ஐ.நா கூட்டத்தையொட்டி இரு தினங்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் தனித்தனியாகச் சந்தித்தார். இன்று நடக்கும் கூட்டத்தில் மோடியும், இம்ரான் கானும் ஒரே மேடையில் பேசவுள்ளனர். இந்தியப் பிரதமர் அமைதி பற்றியும், இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.