Published:Updated:

`என்னுடைய பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறேன்!' -உ.பி காவல் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

காவல் நிலையம்
காவல் நிலையம்

``நான் சொல்வதை கேட்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. இந்த வழக்கைத் திசைதிருப்புவதில் கவனத்தைச் செலுத்தினர். பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளச் சொல்லி கடிதம் எழுத காவல் நிலையத்தில் வற்புறுத்தினர்" என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராய்புர்வா காவல் நிலையத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் வீட்டின் உரிமையாளர் மகன்மீது ஈவ் டீசிங் தொடர்பான புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் புகாரை விசாரிப்பதற்குப் பதிலாக இளம்பெண்ணையும் அவரது தந்தையையும் தவறாக நடத்தியுள்ளனர்.

Complaint letter
Complaint letter

ராய்புர்வாவில் இருந்த காவல்துறை அதிகாரி அந்த இளம்பெண்ணிடம், ``நீ நிறைய படித்திருக்கிறாயா? யார் உன்னை இவ்வளவு அதிகமாக செயல்பட வைப்பது, உன்னுடைய தந்தையா?" என்று கேட்டுள்ளார். மேலும், அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்ட வீட்டின் உரிமையாளரின் மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானமாகச் செல்லும்படி தன்னுடைய தந்தையை வற்புறுத்தியதாகவும் இளம்பெண் கூறியுள்ளார்.

காவல்துறை அடக்குமுறை... தி.மு.க-வும் சளைத்ததல்ல... நிரூபித்த 2009 உயர்நீதிமன்ற சம்பவம்!

இந்தச் சம்பவத்தை அந்த இளம்பெண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவுசெய்துள்ளார். அந்தப் பதிவில், ``ராய்புர்வா காவல் நிலையத்தில், ஒரு பெண் காவலர்கூட இல்லை. என்னுடைய புகாரை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக அங்கிருந்த காவலர்கள் என்னை விமர்சித்தனர். கடைசி வரை வழக்குப்பதிவு செய்யவில்லை. நான் சொல்வதைக் கேட்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. இந்த வழக்கைத் திசை திருப்புவதில் கவனத்தைச் செலுத்தினர். பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளச் சொல்லி கடிதம் எழுத வற்புறுத்தினர். இப்போது, அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

tweet
tweet

இளம்பெண்ணின் குற்றச்சாட்டிற்கு ராய்புர்வா காவல்துறை அதிகாரி சுனில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ``அவருடைய குற்றச்சாட்டுகள் பொய்யானது. இரு தரப்பினரும் பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொண்டனர்" என்று கூறியுள்ளார்.

இதற்கும் மறுப்பு தெரிவித்த இளம்பெண், ``இந்த வழக்கைப் பதிவுசெய்யாத காவல்துறை அதிகாரிதான் இப்படி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு வழக்கில் நல்ல திருப்பம் இது. உங்களுடைய உதவிக்கு நன்றி. என்னுடைய பாதுகாப்பு குறித்து இப்போது கவலைப்படுகிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கான்பூரின் காவல்துறை உயர் அதிகாரி மோஹித் அகர்வாலின் கவனத்திற்கு இந்தச் செய்தி சென்றுள்ளது. இதுதொடர்பாக அவர், ``இந்தச் சம்பவத்தில், தொடர்புடைய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

`லஞ்சம் வாங்கிக் கைதான காவல் ஆய்வாளர்!' -சூடமேற்றி தேங்காய் உடைத்த சமூக ஆர்வலர் #TamilnaduCrimeDiary
அடுத்த கட்டுரைக்கு