`வித்தியாசம் தெரியல; பில் புக் மாறிருச்சு'- மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்து சர்ச்சையான போலீஸ்!
டேராடூனில், மாட்டுவண்டிக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, காவல்துறையினர் விதவிதமாக அபராதம் விதித்த நிகழ்வுகள், கடந்த சில நாள்களாக செய்திகளில் வந்தவண்ணம் உள்ளன. டெல்லியில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞருக்கு 23,000 அபராதம் விதித்தனர். அந்த இளைஞரோ, 'நான் ஓட்டி வந்த ஸ்கூட்டியை விற்றாலே 15,000 தேறாது. அபராதம் 23,000 கட்ட வேண்டுமா?' என நொந்துகொண்டார்.

இந்நிலையில், டேராடூனைச் சேர்ந்த ரியாஸ் ஹாசன் என்பவருக்கு, காவலர்கள் 1000 ரூபாய் அபராதம் விதித்தது சர்ச்சையாகியுள்ளது. மாட்டுவண்டிக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதித்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாட்டு வண்டி சாலையில் நிற்பதைக் கண்டனர். யாருடையது என விசாரித்தபோது, ரியாஸ் என்பவர் உரிமையாளர் எனத் தெரியவந்தது. மோட்டார் வாகன சட்டப்படி, ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரியாஸ், 'எனக்கு சொந்தமான இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்தேன். இதற்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும்; மாட்டு வண்டி என்ன மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வருகிறதா?' என காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து காவலர்கள் பேசுகையில், “ ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு, மாட்டுவண்டியில் சிலர் மணல் திருடுவதாகத் தகவல் வந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர், மாட்டுவண்டியில் சட்ட விரோதமாக மணல் திருடி வந்துள்ளனர். ரோந்துக் காவலர்கள், ரியாஸ் மாட்டுவண்டியை மணல் திருட்டுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதியுள்ளனர். இரவு நேரம் என்பதால், மோட்டார் வாகன சட்டம் பில் புத்தகத்திற்கும் மற்ற ஆவணங்களுக்குமான வித்தியாசம் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) படி அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதித்துவிட்டதாக”த் தெரிவித்தனர்.