Published:Updated:

வாவ சுரேஷ்: பலமாகக் கடித்த பாம்பு; விடாமல் பிடித்த `பாம்பு பிடி மன்னன்’ கவலைக்கிடம்! - அதிர்ச்சி

வாவ சுரேஷ்

இரண்டு வாரங்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி, சிகிச்சையிலிருந்த வாவ சுரேஷ், உடல்நிலை சீரானதும் மீண்டும் பாம்பு பிடிக்க இறங்கிவிட்டார். இப்போது நாகப்பாம்பு கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

வாவ சுரேஷ்: பலமாகக் கடித்த பாம்பு; விடாமல் பிடித்த `பாம்பு பிடி மன்னன்’ கவலைக்கிடம்! - அதிர்ச்சி

இரண்டு வாரங்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி, சிகிச்சையிலிருந்த வாவ சுரேஷ், உடல்நிலை சீரானதும் மீண்டும் பாம்பு பிடிக்க இறங்கிவிட்டார். இப்போது நாகப்பாம்பு கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Published:Updated:
வாவ சுரேஷ்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவ சுரேஷ். இவர் வன உயிரின ஆர்வலராகச் செயல்பட்டுவருகிறார். பாம்புகள்மீது அதீத பாசம்கொண்டவர். வழக்கமாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் வனத்துறைக்கோ, தீயணைப்புத்துறைக்கோ போன் செய்வார்கள். ஆனால், கேரளத்தில் பாம்பைக் கண்டால் உடனே வாவ சுரேஷை அழைப்பார்கள். இவர் இதுவரை சுமார் ஐம்பதாயிரம் பாம்புகளைப் பிடித்து வனத்துறை மூலம் காடுகளில் விட்டிருக்கிறார். அவர் பிடித்ததில் 200-க்கும் மேற்பட்ட ராஜநாக பாம்புகளும் அடங்கும். பாம்புகளைப் பிடிக்க எந்தவிதக் கருவியும் இல்லாமல் வெறும் கைகளால் பிடித்துவிடுவார். எவ்வளவு பெரிய வீரியம்கொண்ட பாம்பாக இருந்தாலும் வாவ சுரேஷின் கைகளில் அடங்கி, அவர் சொல்படி கேட்கும். அந்த அளவுக்கு பாம்புகளைக் கையாளுவதில் வல்லவர் வாவ சுரேஷ். வாவ சுரேஷ் பாம்பு பிடிக்கும் ஸ்டைலைப் பார்க்க ஊரே ஒன்று கூடும். அந்த அளவுக்குப் பிரபலமானவர்.

தொடையில் கடித்த பாம்பு
தொடையில் கடித்த பாம்பு

இந்த நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாகப் பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றித்திரிவதாக வாவ சுரேஷுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் அங்கு சென்றவர் பாம்பைத் தேடினார். பாம்பு ஒரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடுக்கில் புகுந்தது. காம்பவுண்டை உடைத்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு வெளியே வந்தது. பாம்பின் வாலைப் பிடித்த வாவ சுரேஷ், அதை ஒரு டப்பாவில் அடைக்க முயன்றார். பாம்பின் சீற்றம் காரணமாக முடியாமல்போகவே, பிளாஸ்டிக் சாக்கில் அடைக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிளாஸ்டிக் சாக்கினுள் மூன்று முறை உள்ளே சென்ற பாம்பு உடனடியாக வெளியே வந்தது. ஆனாலும் விடாமல் பாம்பை சாக்குப்பைக்குள் அடைக்க முயன்ற சமயத்தில் திடீரென வாவ சுரேஷின் வலது கால் தொடையில் பாம்பு பலமாக கடித்துப் பிடித்துக்கொண்டது. பாம்பை பலமாக இழுத்து கீழேபோட்ட சுரேஷ் கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை வெளியேற்றினார். அப்போது பாம்பு மீண்டும் கல் சுவருக்குள் செல்ல முயன்றது. அந்தப் பாம்பை மீண்டும் பிடித்து ஒரு டப்பாவுக்குள் அடைத்த வாவ சுரேஷ் அங்கேயே மயக்கநிலைக்குச் சென்றார்.

பாம்பு பிடிக்கும் வாவ சுரேஷ்
பாம்பு பிடிக்கும் வாவ சுரேஷ்

பாம்பு பிடிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடி நின்ற பொதுமக்கள் வாவ சுரேஷி மீட்டு கோட்டயத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும், மூளையிலும் பாதிப்பு பெரிதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. பாம்பு கடித்திருப்ப்பதால் 48 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாவ சுரேஷுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும், இது சம்பந்தமாக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சூப்பிரன்ட்டிடம் பேசியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போத்தன்கோட்டில் வைத்து வாவ சுரேஷ் வாகன விபத்தில் சிக்கினார். அப்போது அவரின் தலையில் அடிபட்டதால் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியவர் மீண்டும் பாம்பு பிடிக்க இறங்கிவிட்டார்.

பாம்பை சாக்கில் அடைக்கும் முயற்சியில் வாவ சுரேஷ்
பாம்பை சாக்கில் அடைக்கும் முயற்சியில் வாவ சுரேஷ்

கோட்டயத்தில் பாம்பு பிடிக்கும்போது வாவ சுரேஷை பாம்பு கடித்த சம்பவத்தை பொதுமக்கள் சிலர் மொபைல்போனில் பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது. மேலும் பாம்பு ஆர்வலரான வாவ சுரேஷ் நலமடையவேண்டி சமூக வலைதளங்களில் பலர் வேண்டுதலையும் முன்வைக்கின்றனர். பாம்புபிடி மன்னன் வாவ சுரேஷைப் பாம்பு கடித்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism