Published:Updated:

`18-ல் தொடக்கம்; 93-ல் ஓய்வு!’ - ராம் ஜெத்மலானியின் சட்ட, அரசியல் பயணம்

சத்யா கோபாலன்

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, இன்று காலை அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

Ram Jethmalani
Ram Jethmalani

'ராம் ஜெத்மலானி', இந்தப் பெயர் தமிழகம் உட்பட மொத்த இந்தியாவுக்கும் பரிச்சயமான ஒன்று. வழக்குகள், அரசியல், சர்ச்சை என அனைத்துக்கும் பெயர்பெற்று துணிச்சலாகத் திகழ்ந்த மூத்த வழக்கறிஞர். இவர், இன்று காலை காலமானார்.

Ram Jethmalani
Ram Jethmalani

95 வயதான இவர், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் 1923-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பிறந்தார். பள்ளிக் காலத்தில் சிறந்து விளங்கியதால், தொடர்ந்து உயர்வுகள் பெற்று தன் 14 வயதில் மேல்நிலை கல்வியும் 17 வயதில் சட்டக்கல்வியும் படித்து முடித்தார். பின்னர், 18 வயதில் வழக்கறிஞராக வேலைக்கும் சேர்ந்துவிட்டார். முதன்முதலாகட் தன் சொந்த ஊரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, அப்போதே கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர், பாகிஸ்தானின் கராச்சியில், தன் நண்பர் ஏ.கே. ப்ரோஹியின் உதவியுடன் சட்ட நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்திவந்தார். 1948-ம் ஆண்டு, கராச்சியில் மிகப் பெரிய கலவரம் வெடித்ததன் விளைவாக, இவர்பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார். ஒரு ரூபாயுடன் வந்த இவர், அகதிகள் முகாமில் சில நாள்கள் தங்கியிருந்தார். பின்னர், இந்தியாவில் தன் முதல் வழக்காக அகதிகளுக்கு ஆதரவாக வாதாடினார். 1956-ம் ஆண்டு நடந்த இந்திய கடற்படை தளபதி நானாவதி கொலை வழக்கில் ஆஜரானதன் மூலம்தான் அதிகப் பிரபலமானார் ராம் ஜெத்மலானி. பின்னர், மும்பை நீதிமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.

Ram Jethmalani
Ram Jethmalani

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் வழக்கு, அஃப்சல் குரு வழக்கு, ஜெசிகா லால் கொலை வழக்கு, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம், அத்வானி ஊழல் வழக்கு, அமித் ஷாவின் சோராபுதின் என்கவுன்டர் வழக்கு, லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு போன்ற பெரிய தலைவர்களின் முக்கிய வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார். 2010-ம் ஆண்டு, இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பல உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்கள் என ஏராளமான முக்கிய வழக்குகளில் வாதிட்டு வெற்றிபெற்றுள்ளார். சட்டத்துறையில் தைரியமாக சில கடிதங்களில் கையெழுத்திட்டு, துணிச்சலாக அதை எதிர்கொண்டவர்.

Ram Jethmalani
Ram Jethmalani

’வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொது வாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என் புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக என் போராட்டத்தைத் தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன்’ எனக் கூறி, கடந்த 2017-ம் ஆண்டு தன் வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

ராம் ஜெத்மலானிக்கு ரத்னா, துர்கா என இரண்டு மனைவிகளும் அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களில், மகேஷ் ஜெத்மலானி மற்றும் ராணி ஜெத்மலானி ஆகிய இருவரும் பிரபலமான வழக்கறிஞர்கள். ராம் ஜெத்மலானியின் அரசியல் வாழ்க்கையும் அவரின் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் மும்பையிலிருந்தபோது, அதாவது இந்தியாவின் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Ram Jethmalani
Ram Jethmalani

வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1995-ம் ஆண்டு, ’பவித்ர ஹிந்துஸ்தான் கழகம்’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால், அதற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர், 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, 2010-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க-வில் சேர்ந்த ராம் ஜெத்மலானி, அதே ஆண்டு அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம் ஜெத்மலானி போட்டியிட்டார். புகழ், சர்ச்சை போன்ற அனைத்தையும் சந்தித்த ராம் ஜெத்மலானி, தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். பல தலைவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

Ram Jethmalani
Ram Jethmalani

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராம் ஜெத்மலானி, தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்தார். இதற்கிடையில், டெல்லியில் உள்ள தன் மகன் மகேஷ் ஜெத்மலானியின் வீட்டில் இன்று காலை 7:15 மணிக்கு உயிரிழந்தார். ராம் ஜெத்மலானியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.