Published:Updated:

`கட்டியணைத்துக் கண்ணீர்மல்க பிரியாவிடை!'- அவிநாசி விபத்தில் உயிரிழந்த ஜோஃபியின் உருக்கமான வீடியோ

ஜோஃபி
ஜோஃபி

அவிநாசி விபத்து, கேரளாவில் ரணமாக வலித்துக்கொண்டிருக்கிறது. இதில் உயிரிழந்த ஜோஃபி பால் என்பவர், பணிமாற்றம் செய்யப்பட்டபோது சக ஊழியர்கள் அவருக்கு கண்ணீர்மல்க பிரியா விடை கொடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

திருப்பூர் அவிநாசி அருகே, கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து மீது ட்ரக் லாரி மோதியதில் 19 பேர் பலியாகினர். இந்த விபத்து, கேரளாவில் இன்னும் ரணமாக வலித்துக்கொண்டுதான் இருக்கிறது. திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பால் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

குடும்பத்தினருடன் ஜோஃபி பால்
குடும்பத்தினருடன் ஜோஃபி பால்

இவர், பெங்களூரில் உள்ள ஜோய் ஆலுகாஸ் நகைக் கடையின் மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவரது இழப்பால், ஜோஃபியின் உறவினர்களும் சக பணியாளர்களும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜோஃபியின் நண்பர்கள் கூறுகையில், “எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்துகொண்டிருப்பார். நல்ல ஆளுமைப் பண்பு கொண்டவர். தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை சிறப்பாக நடத்துவார். அதனாலேயே, அனைத்து ஊழியர்களுக்கும் அவர்மீது தனிப்பாசமுண்டு. தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி செல்ல வேண்டுமென்பது ஜோஃபியின் நீண்ட நாள் ஆசை.

ஜோஃபி பால் சடலமாக
ஜோஃபி பால் சடலமாக

அந்த ஆசையை நிறைவேற்றத்தான் அவர் பெங்களூரில் இருந்து திருச்சூர் புறப்பட்டார். இப்படியாகுமென்று தெரிந்திருந்தால் அவரை நாங்கள் விட்டிருக்கவே மாட்டோம்” என்றனர் வருத்தத்துடன்

இதனிடையே, ஜோஃபி பெங்களூருக்கு முன்பு மைசூர் கிளையில் பணியாற்றிவந்துள்ளார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து அவர் பெங்களூர் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது, மைசூர் கிளையில் உள்ள ஊழியர்கள் அவரைப் பிரிவதற்கு மனமில்லாமல், காலில் விழுந்தும் கட்டியணைத்தும், கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துள்ளனர்.

ஜோஃபி
ஜோஃபி

அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜோஃபிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அனைவருமே ஆறு வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகளுக்காக, ஜோஃபி தனது பழைய வீட்டை விற்றுவிட்டு, புதிய வீடு கட்டுவதற்கான திட்டத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு