Published:Updated:

` புடவை உடுத்துபவர்களுக்கு அனுமதி இல்லை!' - வைரலான டெல்லி உணவகத்தின் சர்ச்சை வீடியோ; என்ன நடந்தது?

புடவை என்பது ஸ்மார்ட் ஆடை இல்லை என்று கூறி, டெல்லி உணவகத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் பேசிய வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புடவை என்பது இந்தியாவின் பாரம்பர்யங்களில் ஒன்று. இந்நிலையில் அனிதா செளத்ரி என்ற பெண் பத்திரிகையாளர் , சில தினங்களுக்கு முன், ``புடவை என்பது ஸ்மார்ட்டான ஆடை இல்லை என்பதால், டெல்லி உணவகத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஆடை என்பதற்கான வரையறையை எனக்குத் தெளிவுபடுத்துங்கள்'' என்று ட்விட்டரில் பதிவிட்டு, அமித்ஷா, டெல்லி காவல்துறை , தேசிய பெண்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களை டேக் செய்திருந்தார். மேலும் அதில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது

அந்த வீடியோவில், ஆவேசமாகப் பேசும் பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணியாற்றும் கோட் சூட் அணிந்த பெண் ஒருவர், ``நாங்கள் கேஷுவல் ஆடைகள் அணிந்திருக்கும் நபர்களை மட்டும்தான் உணவகத்தில் அனுமதிப்போம். புடவை ஸ்மார்ட்டான கேஷுவல் ஆடை இல்லை'' என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, சம்பந்தப்பட்ட டெல்லி, அக்யூலா உணவகத்திற்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பாக அதன் ஆணையர், ``பெண்கள் புடவை அணிந்து உணவகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்வது ஒரு வகையான வன்முறை" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அக்யூலா உணவகத்தின் சார்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், `நாங்கள் இதுவரை பொறுமையாகதான் இருந்தோம். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. எங்கள் உணவகத்தைப் பயன்படுத்த முன்பதிவு செய்வது என்பது கட்டாயம். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் முன்பதிவு எதுவும் செய்யவில்லை. அவரை காத்திருக்கச் சொன்னோம்.

ஆனால், அதற்குள் அவர் எங்கள் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டு கூச்சலிட ஆரம்பித்தார். நிர்வாகத்தில் பணியாற்றிய நபர் ஒருவரையும் அடித்துள்ளார். பிரச்னையைத் தற்காலிகமாக முடிக்க எண்ணி, எங்கள் நிர்வாகத்தின் பணியாளர் ஒருவர், ஆடையை காரணம் காட்டி வெளியே போகுமாறு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது நிர்வாகத்தில் பணியாற்றும் தனிநபரின் கருத்து மட்டுமே, நிர்வாகத்தின் கருத்து கிடையாது. இதற்கு முன் புடவை அணிந்து வந்த எத்தனையோ பெண்களை நாங்கள் மரியாதையுடன் நடத்தியுள்ளோம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட பெண் எங்களிடம் ஒரு மணிநேரம் விவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் இருக்கின்றன. ஆனால் பத்து நொடி காட்சிகளை மட்டுமே அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு மணி நேரம் வாக்குவாதம் நடந்ததற்கான ஆதாரத்தையும், அந்தப் பெண் எங்கள் பணியாளரை அடித்தற்கான ஆதாரங்களையும் நாங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்' என்று புகைப்படங்களுடன் பதிவிட்டு இருந்தனர்.

புகார் அளித்த பெண்ணுடன் வானதி சீனிவாசன்
புகார் அளித்த பெண்ணுடன் வானதி சீனிவாசன்
Twitter Image:// @VanathiBJP
̀ஆடையைக் குறைத்தால் ஆளுமை என்றால் ராக்கி சாவந்த் கூட ஆளுமைதான்!' - உ.பி சபாநாயகரின் சர்ச்சை பேச்சு

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம். எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் ட்விட்டரில் இந்த நிகழ்வு குறித்து பதிவிட்டிருந்த பெண் பத்திரிக்கையாளரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பெண்கள் ஆணையம், சம்பத்தப்பட்ட உணவகத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது உண்மையெனில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸாரிடம் தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா உத்தரவிட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வரும் 28-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு வருமாறு அந்த உணவகத்தின் பிரதிநிதியை தேசிய பெண்கள் ஆணையம் அழைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு