Published:Updated:

மருத்துவரின் சிகிச்சைக்காக ₹20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்; நெகிழ்ச்சி சம்பவம்!

மருத்துவ தம்பதி பாஸ்கர் ராவ் - பாக்கியலட்சுமி
மருத்துவ தம்பதி பாஸ்கர் ராவ் - பாக்கியலட்சுமி ( Photo: IANS )

ஆந்திராவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கிராம மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி ரூ.20 லட்சத்தை சிகிச்சைக்கு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராவ் (38). மருத்துவரான இவர் கரஞ்சேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரின் மனைவி மருத்துவர் பாக்கியலட்சுமி, குண்டூர் மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவர் தம்பதியான பாஸ்கர் - பாக்கியலட்சுமி இருவரும் இணைந்து கிராமப்புற மக்களுக்கு நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்வது, மருத்துவ முகாம்கள் நடத்துவது எனச் சமூகம் சார்ந்த பார்வையுடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு வருட காலமாக கரஞ்சேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் பாஸ்கர், கொரோனா முதலாம் அலையின் போதிலிருந்து கரஞ்சேடு கிராம மக்கள் அனைவரையும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள நோய்த்தொற்று பாதிப்பு குறித்தும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு செய்தார். அவரது நடவடிக்கைகளால் நோய்ப்பரவல் கிராமத்தில் பெரியளவில் தடுக்கப்பட்டது. கொரோனா பரவல் ஆந்திராவில் வேகமெடுக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையிலும் இரவு பகல் பாராது அயராது மக்கள் உயிர்காக்கப் போராடிக் கொண்டிருந்த மருத்துவர் பாஸ்கர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமான கிராம மக்களுக்கு நம்பிக்கையூட்டி தேற்றி குணமாக்கி வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்.

corona virus
corona virus
Pixabay

தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றும்படியும் மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அலட்சியமாக இருந்து வந்த கரஞ்சேடு கிராம மக்கள், மருத்துவர் பாஸ்கரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டு, நோய்த்தொற்று குறித்து விழிப்புடன் இருப்பதாகக் கிராம அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் என்பதைத் தாண்டி கிராம மக்கள் மீது பாஸ்கர் காட்டிய அன்பும், அக்கறையும் அவரை கரஞ்சேடு கிராமத்தின் குடும்பங்களில் ஒருவராக இணக்கமாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் மக்கள் உயிர்காக்க அயராது உழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் பாஸ்கர் மற்றும் அவரின் மனைவி பாக்கியலட்சுமி இருவருக்கும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியானது. அதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த இருவரும் ஏப்ரல் 30-ம் தேதி குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவர் பாஸ்கரின் மனைவிக்கு மருத்துவ உதவிகள் எதுவும் தேவைப்படாத நிலையில், பாஸ்கரின் உடல்நிலை நோய்த்தொற்று பாதிப்பால் மோசமாகத் தொடங்கியதால் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவச் சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். குண்டூர் மருத்துவமனையில் `ரெம்டெசிவிர்' மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவரின் நிலை மோசமடைய, அங்கிருந்து மே 3-ம் தேதி விஜயவாடாவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சில நாள்கள் ஆக்சிஜன் உதவியுடன் பாஸ்கர் ராவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்து நிலையில், நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகமானதால் அங்கிருந்து அவர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள யசோதா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவ தம்பதி பாஸ்கர் ராவ் - பாக்கியலட்சுமி
மருத்துவ தம்பதி பாஸ்கர் ராவ் - பாக்கியலட்சுமி
Photo: IANS

யசோதா மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மே 10-ம் தேதி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கச்சிபவ்லி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாஸ்கரின் நுரையீரல் தொற்றால் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவருக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு சுமார் 1.50 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பாக்கியலட்சுமி சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் பரிதவித்து இருந்துள்ளார். இந்நிலையில் தகவலறிந்த கரஞ்சேடு கிராமத்தினர் தங்கள் உயிர் காக்கப் போராடிய மருத்துவர் பாஸ்கரின் சிகிச்சைக்கு தங்களால் இயன்றதை அளிப்பதெனச் சபையைக் கூட்டித் தீர்மானித்தனர். மொத்த கிராமமும் மருத்துவரின் சிகிச்சைக்கு நிதி அளிக்க, கரஞ்சேடு கிராமத்தைச் சேர்ந்த நாயுடம்மா கரஞ்சேடு மட்டுமன்றி, ஸ்வர்ணா, நகுலபாலம் உள்ளிட்ட அண்டை கிராமங்களிலும் நிதி திரட்டி ரூ.20 லட்சத்தை மருத்துவரின் சிகிச்சைக்காக அவரின் உறவினர்களிடம் அளிதந்தனர்.

ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி
ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி

இருப்பினும், சிகிச்சைக்கு அந்தப் பணம் போதுமானதாக இல்லாததால் பாஸ்கரின் மனைவி பாக்யலக்ஷ்மி Crowd Funding தளங்களின் மூலம் தொகையைத் திரட்டினார். மேலும் பாக்கியலட்சுமி ஆந்திர மாநில மருத்துவ சங்கத்தின் மூலம் விஷயத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். கடந்த 20 நாள்களாக ஆந்திர பத்திரிகைகளில் அரசு மருத்துவரின் கொரோனா போராட்டம் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவர் பாஸ்கரின் சிகிச்சைக்கு உதவியுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சைக்கு ரூ.1.50 கோடி - ரூ.2 கோடி வரை செலவாகும் என்ற கூறியிருந்த நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவச் செலவான ரூ. 1.50 கோடியை மாநில அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு