Published:Updated:

`கால் விரல்களைப் பிடித்து கைகுலுக்கிய பினராயி விஜயன்!’- கேரள மக்களை நெகிழவைத்த செல்ஃபி

கேரள முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத்திறனாளி இளைஞரை நடத்தியவிதம் மக்களை நெகிழச் செய்துள்ளது.

கைகுலுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன்
கைகுலுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று வந்திருந்தார். பிரணவுக்கு இரு கைகளும் கிடையாது. முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக அவரைச் சந்தித்தார். இருவர் சந்தித்தால், கை குலுக்கிக்கொள்வார்கள் அல்லவா... அப்படி கை குலுக்கிக்கொள்ள பிரணவால் முடியாதே!

கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் செல்ஃபி
கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் செல்ஃபி

ஆனால், பினராயி விஜயனோ தன் கையால் பிரணவின் கால்களைப் பிடித்து கைகுலுக்கிக்கொண்டார். மேலும், பிரணவ் தன் காலால் கொடுத்த மனுவையும் பேரிடர் நிவாரண நிதியையும் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். பின்னர், முதல்வருடன் பிரணவ் தன் காலால் மொபைலைப் பிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள, பினராயி விஜயன், 'இந்த நாளில் நான் சட்டமன்றத்துக்கு வந்தபோது இதயம் தொடும் சம்பவம் நிகழ்ந்தது' என்று பதிவிட்டுள்ளார்.

பிரணவுக்குப் பிறந்தது முதலே கைகள் கிடையாது. எனினும், தன் பணிகளைக் கால்களால் செய்துகொள்ள பழகிக்கொண்டார். சித்தூர் அரசுக் கல்லூரியில் படித்தவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கேரளாவில் பிரபலமானவர். மாற்றுத்திறனாளி இளைஞரை கேரள முதல்வர் நடத்தியவிதம் கேரள மக்களை நெகிழ வைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வு மட்டுமல்ல, பல விஷயங்களில் கேரள முதல்வர் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது.

மது குடும்பத்துடன் பினராயி விஜயன்
மது குடும்பத்துடன் பினராயி விஜயன்

கேரளாவில், தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் விபத்தில் சிக்கினார். பணம் இல்லாத காரணத்தால், மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்ததால், அவர் இறந்துபோனார். பலியானவரின் குடும்பத்துக்கு கேரள அரசு நிதியுதவி அளித்தது. சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீதும் கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில், அரிசி திருடியதாக இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்டார். மதுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பினராயி விஜயன் ஆறுதல் கூறினார். தற்போது, மதுவின் சகோதரிக்கு கேரள போலீஸில் பணி அளிக்கப்பட்டுள்ளது.