Published:Updated:

`அசாதாரண சூழல்; ஆன்லைன் கமென்ட்ரி!’ -ஜெர்மனியில் இருந்து அனுபவம் பகிரும் செஸ் மாஸ்டர் ஆனந்த் #Corona

விஸ்வநாதன் ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த்

``சுத்தமான காற்றை சுவாசிக்க, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் வெளியே செல்கிறேன். மக்கள் கூட்டமான இடங்களைத் தவிர்க்கிறேன். வீட்டுக்குத் தேவையான சில பொருள்களை வாங்க அருகில் உள்ள கடைக்குச் செல்கிறேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. சீனாவில் உருவான இந்த வைரஸ், தற்போது உலக அளவில் பரவி அனைத்து மக்களையும் அச்சத்தில் உறையவைத்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க நகரங்களை முடக்குவது, பல நாடுகளில் எல்லைகளைப் பூட்டுவது, விமானங்களை ரத்துசெய்வது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துள்ளன. இந்நிலையில், ஜெர்மனிக்கு போட்டிக்காகச் சென்ற செஸ் மாஸ்டர் ஆனந்த், அங்குள்ள நிலைமைகுறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா
கொரோனா

ஜெர்மனியில் நடைபெற இருந்த செஸ் போட்டிக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தனது அணியுடன் அங்கு சென்றுள்ளார், ஆனந்த். ஆனால், கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியதால், போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்தியா திரும்புவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாகத் தன்னை தனிமைப்படுத்த ஆனந்த் முடிவு செய்துள்ளார். பிராங்க்ஃப்ர்ட் நகரத்தில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தானாகவே முன் வந்து தன்னை தனிமைப்படுத்தித் தங்கியுள்ளார். இதனிடையே, இந்திய அரசு விதித்த சில பயணக் கட்டுப்பாடுகளை அறிந்த ஆனந்த், குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற எண்னத்தில் அங்கேயே இருந்துவருகிறார்.

``நான் வாழ்க்கையில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு சூழலை அனுபவிக்கிறேன். எனவே, எனக்கு இது மிகவும் அசாதாரணமான அனுபவமாகும்” என்று பேசத் தொடங்கிய ஆனந்த், ``என் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். மனைவி மற்றும் மகனுடன் வீடியோவில் உரையாடிவருகிறேன். ஒருவருக்கொருவர் பேசுவதன்மூலம், கடினமான இந்தக் காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறோம். எனது மகனுடன் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும், வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். ஆரோக்கியத்துடன் இருக்க யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறன்” என்றார்.

`கண்காணிப்பில் 59,295 பேர்; ஆட்சியர்களுக்கு அதிகாரம்!’ கேரளாவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

தொடர்ந்து பேசிய அவர், ``சுத்தமான காற்றை சுவாசிக்க, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் வெளியே செல்கிறேன். மக்கள் கூட்டமான இடங்களைத் தவிர்க்கிறேன். வீட்டுக்குத் தேவையான சில பொருள்களை வாங்க அருகில் உள்ள கடைக்குச் செல்கிறேன். மீதமுள்ள நேரங்களில் வீட்டில்தான் இருக்கிறேன். அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. மருந்தகங்கள் திறந்துள்ளன. மக்கள், வீட்டில் இருந்தபடியே உணவுகளை ஆர்டர் செய்து வாங்க முயல்கிறார்கள்” என்றார்.

செஸ்போட்டிகுறித்து அவர் பதிவுசெய்கையில், ``கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் எனது விளையாட்டுப் போட்டிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. வைரஸ் தாக்கம் குறைவதைப் பொறுத்துதான் போட்டிகளின் அட்டவணைகள் எதிர்காலத்தில் அமைக்கப்படும். அதற்காக, நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளுக்கு ஆன்லைன் வழியாக கமென்ட்ரி செய்து வருகிறேன். இது, என்னுடைய மாலை வேளையை பிஸியாக வைத்திருக்கிறது. பெரும்பாலும் நான் போட்டியாளராகவே இருந்துள்ளேன். அதனால், இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கொரோனா
கொரோனா

இந்தியா திரும்புவதுகுறித்த பயண ஆலோசனைகளைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடும் அவர், ``மார்ச் 28-ம் தேதி வரை விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார். மேலும், ``கொரோனா வைரஸ் உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதும் முக்கியமான விஷயம். எனவே, அரசாங்கம் வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். கூட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதைக் கடைபிடித்தால்தான் வைரஸ் பரவுவதில் நம்முடைய பங்கு இருக்காது. எல்லோரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Credits : Hindustan times

`நீங்கள் ஏன் மாஸ்க் அணியவில்லை..?!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்திய தஞ்சை காவலர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு