Published:Updated:

`நள்ளிரவில் வெளியேறிய வாயு; அபாய எச்சரிக்கை கொடுக்காத ஆலை!’- திகில் நிமிடங்களை விவரித்த கிராம மக்கள்

தனியார் ஆலை
தனியார் ஆலை

விசாகப்பட்டினம் தனியார் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு குறித்து கிராம மக்கள் விவரித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி பாலிமர் இந்தியா என்ற தெர்மாக்கோல் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது, நள்ளிரவில் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு அருகில் இருந்த ராஜரத்தின வெங்கடாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்களின் சுவாசத்தில் பிரச்னையை ஏற்படுத்தியது. மூச்சுத்திணறால் பதறியடித்து எழுந்த மக்கள் காற்றில் ஏதோ ஒருவித வாசனையை உணர்ந்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த மக்கள் தங்களது உயிர்களைக் காத்துக்கொள்ள வெளியில் ஓடிவந்துள்ளனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

ஆசையாக வளர்த்த கால்நடைகள் எல்லாம் வாந்தி எடுத்தநிலையில் மயங்கி விழுந்த காட்சிகள் அவர்களை மேலும் பதற்றமடையச் செய்தன. இளைஞர்களின் உதவியுடன் கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறினர். ஆலையிலிருந்து வெளியேறிய ஸ்டைரீன் வாயுதான் இந்தத் திடீர் பிரச்னைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நச்சுத்தன்மை கொண்ட இந்த வாயு கசிந்தால் துர்நாற்றம் வீசும் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவில் என்ன நடந்தது என்பதை கிராம மக்கள் விவரித்துள்ளனர்.

`விசாகப்பட்டின விபத்தின் ஸ்டைரீன் வாயு... மீளமுடியாத உபாதைகளை ஏற்படுத்தலாம்!’ - மருத்துவர் விளக்கம்

ஆலைக்கு அருகில் இருந்த மக்கள்தான் முதலில் வாயு வெளியேறுவதை உணர்ந்துள்ளனர். மூச்சுத்திணறால் அவதிப்பட்ட கிராம மக்கள் வெளியே வந்துள்ளனர். தெருக்கள் முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்துள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் சிலர் ஆலைக்குச் சென்று விசாரித்ததாகவும் அங்கிருந்த செக்யூரிட்டிகள் ஸ்டைரீன் வாயு கசிந்துவிட்டது. இங்கிருந்து ஓடிவிடுங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறியதாகச் சொல்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆலையைச் சேர்ந்தவர்கள் எந்த அபாய ஒலிகளையும் ஒலிக்கச்செய்யவில்லை என கிராம மக்கள் கூறியதாக தீ வீக் ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கிராம மக்கள்
கிராம மக்கள்

ஆன்லைன் கேமான பப்ஜியை இரவு நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர்தான் வாயு கசிவை முதலில் உணர்ந்தாகவும் அவர்தான் மற்ற நண்பர்களுக்கு போன் மூலம் தெரியப்படுத்தியதாகவும் தீ வீக் செய்தி வெளியிட்டுள்ளது. ஆலையையொட்டி அவரது வீடு அமைந்திருந்தாகக் கூறப்படுகிறது.

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

ஆலையிலிருந்து வாயு வெளியேறுவது தொடர்பாக அதிகாலை 3.25 மணிக்குக் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து லோக்கல் இன்ஸ்பெக்டர் அந்தப்பகுதிக்கு விரைந்துள்ளார். தீயணைப்புத் துறையினருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும், வாயு தாக்கம் காரணமாக அவர்களால் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. வாயு தாக்கம் காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள்
கிராம மக்கள்

வெங்கடாபுரத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு இடத்துக்கு பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளனர். இதனையடுத்து தூய்மையான காற்றை சுவாசித்த பின்னரே நிம்மதி மூச்சடைந்துள்ளனர். கிராமத்தில் இன்னும் எத்தனை பேர் வெளியேறவில்லை என்ற தகவல் தெரியாததால் மீண்டும் கிராமத்துக்கு இளைஞர்கள் சிலர் விரைந்துள்ளனர். இளைஞர்கள் திரும்பிச் செல்லும் போது கிராமத்தில் வாயு தாக்கம் மற்றும் புகை கொஞ்சம் குறைந்து காணப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நச்சுக்காற்றை நீண்ட நேரம் சுவாசித்ததால் ஏராளமானவர்கள் சாலையில் மயங்கி விழுந்துள்ளனர். உயிரற்ற சடலங்களையும் கிராம மக்கள் கண்டுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மீட்புப்பணிகளை துரிதப்பட்டுத்தியுள்ளனர். இது நச்சு வாயு என்பதை உணர்ந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிராமங்களில் இருந்த மக்களை மீட்டுள்ளனர். வீடுகளுக்குள் மயக்க நிலையில் இருந்தவர்களை கதவுகளை உடைத்து மீட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் 20 பேர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் ஆலை
தனியார் ஆலை

நச்சுக்காற்றை சுவாசித்ததில் பாதிப்படைந்த 554 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 128 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும். 52 குழந்தைகள் உட்பட 302 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு