Published:Updated:

`விளையாட்டுக்கு நடுவிலும் விடாத தாய்மைக் குணம்!' -மக்களின் மனதை வென்ற மிசோரம் வாலிபால் வீராங்கனை

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை தன் போட்டிக்கு நடுவே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வீராங்கனை லால்வெண்டலுவாங்கி
வீராங்கனை லால்வெண்டலுவாங்கி

மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. அம்மாநில தலைநகரான ஐஸாவ்லில் (Aizawl) 32 சங்கங்களின் கண்காணிப்பில் சுமார் 40 பிரிவுகளின்கீழ் இந்தப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக 1.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மிசோரம் அரசு தெரிவித்துள்ளது.

மிசோரம் விளையாட்டுப் போட்டி
மிசோரம் விளையாட்டுப் போட்டி

இந்த விளையாட்டுப் போட்டியின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. நேற்று தொடங்கிய வாலிபால் போட்டியில் துய்கும் (tuikum) பகுதியைச் சேர்ந்த லால்வெண்டலுவாங்கி (Lalventluangi) என்ற வீராங்கனை விளையாடிக்கொண்டிருக்கும்போது, நடுவே கிடைக்கும் சில நிமிட இடைவெளியில் தன் 7 மாத குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம்தான் பலரது மனங்களைக் கொள்ளையடித்துள்ளது.

`தினமும் 45 கி.மீட்டர்; நெஞ்சோடு அணைத்தபடி குழந்தை' - உபர் டெலிவரி பெண்ணின் நெகிழ்ச்சிப் பயணம்

இடைவேளையில் குழந்தையைக் கவனித்துவிட்டு மீண்டும் தன் விளையாட்டைத் தொடரும் அந்தப் பெண்ணின் விளையாட்டு அர்ப்பணிப்பையும் தாய்மை குணத்தையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

லால்வெண்டலுவாங்கி
லால்வெண்டலுவாங்கி

அவரின் புகைப்படம் வைரலான பிறகு அதைப் பார்த்த அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா, லால்வெண்டலுவாங்கியை மேலும் ஊக்குவிக்கும்விதமாக `அவருக்கு ரூபாய் 10,000 பரிசுத் தொகை வழங்கப்படும்' என அறிவித்துள்ளார்.