Published:Updated:

`திருச்சி கலெக்டருக்கு எங்கள் நிலை தெரியுமா?' -குவைத்தில் தவிக்கும் 580 தமிழர்கள்

குவைத் லாக்டௌன்
குவைத் லாக்டௌன்

``இந்தியாவின் பல மாநிலங்கலிருந்து குவைத்துக்கு வேலைக்குச் சென்றவர்களும் தங்களுடைய மாநிலங்களுக்குத் திரும்பி வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், தமிழர்கள் மட்டும் உரிய அனுமதி கிடைக்காமல் திணறி வருகின்றனர்.”

உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் எல்லைகளைக் கடந்து வேலை தேடிச் சென்ற தொழிலாளர்கள் பலரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியர்களும் இதில் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். வேலையிழப்பு மற்றும் பணமின்மை போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் தவித்துவரும் பலரும், தங்களது நாடுகளுக்குத் திரும்ப முயற்சி செய்துவருகின்றனர். தொழிலாளர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவிகளையும் செய்துவந்தன.

இந்த நிலையில், குவைத் நாட்டில் வசித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 580 தொழிலாளர்கள், விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தும், தமிழகம் வர உரிய அனுமதி கிடைக்காமல் அந்நாட்டில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

விமானம்
விமானம்

குவைத் நாட்டிலிருந்து தமிழகம் திரும்புவதில் உள்ள சிக்கல் தொடர்பாக, அந்நாட்டில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``கொரோனா வைரஸால் நாங்கள் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளோம். `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பார்கள். ஆனால், ஊரை விட்டு வேறு ஊர் வந்ததற்கான தண்டனைகளை அனுபவிப்பதுபோல நாங்கள் உணர்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லை. பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் அமைப்புகளும், உதவி செய்யும் மனம் உள்ளவர்களும் எங்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை வழங்கிவருகின்றனர். ஆனால், அதையே நம்பி எங்களால் எவ்வளவு காலம் இருக்க முடியும். கிடைக்கும் உணவைக்கூட மனநிறைவாக சாப்பிட முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஊர் திரும்ப நினைத்தால், அனுமதி இல்லை” என்று வேதனையுடன் பேசத் தொடங்கினார்.

டெல்லியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... கண்டுகொள்ளாத தமிழக அரசு!

கேரளா, கர்நாடகா என இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து குவைத்துக்கு வேலைக்குச் சென்றவர்களும் தங்களுடைய மாநிலங்களுக்குத் திரும்பி வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், தமிழர்கள் மட்டும் உரிய அனுமதி கிடைக்காமல் திணறி வருவதாகக் குறிப்பிடுகின்றனர். குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவர்கள் பயணத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவையும் செய்துள்ளனர்.

விமானம் கிளம்புவதற்கான நேரம் உள்ளிட்ட தகவல்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று குவைத் நாட்டிலிருந்து திருச்சிக்கு சுமார் 3 விமானங்கள் கிளம்பத் தயாராக இருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என நம்மிடம் பேசிய நபர் குறிப்பிட்டார். திருச்சியில் தரை இறங்குவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என நிர்வாகம் குறிப்பிட்டதாகவும் கூறினார்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``குவைத்திலிருந்து திருச்சி வரும் விமானங்கள் தொடர்ந்து ரத்துசெய்யப்படுகின்றன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. `வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக பத்து ஹோட்டல்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் அங்கு தங்குவதில்லை. அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் அனுமதி கொடுக்க முடியும்’ என ஆட்சியர் கூறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஹோட்டல்கள் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தக் கூறினால் எங்களால் எப்படி செலுத்த முடியும்? கடந்த நான்கு மாதங்களாக சம்பளம்கூட கிடைக்கவில்லை. கடன் வாங்கிதான் டிக்கெட்டுகளையே எடுத்துள்ளனர்” என்றார்.

மேலும், `` குவைத்தில் உள்ள தூதரகம் எங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று கவலையாக உள்ளது. இதேமாதிரியான சூழல் தொடர்ந்தால், பசியும் பட்டினியும்தான் அதிகமாகும். இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், தினசரி கூலிகளை நம்பியுள்ளவர்கள். தற்போது, இங்கிருந்து ஊருக்குச் சென்றால்கூட அவர்களுடைய எதிர்காலம் என்ன என்பது அச்சத்துக்கு உரிய ஒன்றாகவே உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

விமானம் குறித்த தகவல்கள்
விமானம் குறித்த தகவல்கள்

இதேபோல குவைத்தில் சிக்கித்தவிக்கும் மற்றொரு நபரான நிலவன் என்பவர் பேசும்போது, ``குவைத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க சுமார் 580 நபர்கள் விமான நிலையத்துக்குச் சென்றோம். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உடையவர்கள் என அனைவரும் விமானத்தில் பயணம் செய்ய இருந்தனர். ஆனால், நாங்கள் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டோம். ஏனெனில், விமானங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.

நாங்கள் அனைவரும் எங்களுடைய அறைகளைக் காலி செய்துவிட்டு விமான நிலையத்துக்குச் சென்றோம். இப்படியான சூழலில் விமானங்கள் ரத்து செய்யப்படும்போது, திரும்பி வந்து இயல்புநிலைக்குத் திரும்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. இதனை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!
அடுத்த கட்டுரைக்கு