Published:Updated:

தேசிய கல்விக் கொள்கை 2020: `கல்வியை நவீனமாக மாற்றும் முயற்சி’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவின் கல்வியை நவீனமாக மாற்றும் முயற்சியாகவே தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020 சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையைப் பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இதற்கு அதே அளவுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் 2020 நிகழ்ச்சியில் பல மாணவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசினார்.

கல்வி
கல்வி

பின்னர் நாட்டு மக்களிடம் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசுகையில், ``இந்தியாவில் மாணவர்களுக்கான கல்வியைத் தரமாக வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். நம் கல்வி முறையை மிகவும் முன்னேற்றமாகவும் நவீனமாகவும் மாற்றுவதே எங்கள் முயற்சி. இந்த 21-ம் நூற்றாண்டு ஒரு அறிவின் சகாப்தமாக உள்ளது. கற்றல், ஆராய்ச்சி, புதுமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை இதைச் செய்கிறது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அபிலாஷைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை என்பது பள்ளிகளுக்கு அப்பாற்பட்டது. மாணவர்களைப் புத்தகப் பையின் சுமையிலிருந்து விடுவித்து வாழ்கைக்கு உதவும் வகையில் கற்பிக்கும். வெறுமனே மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி மாணவர்களை விமர்சன சிந்தனைக்கு மாற்றும்.

ஹேக்கத்தான் நிகழ்ச்சி
ஹேக்கத்தான் நிகழ்ச்சி

இந்தக் கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் மொழிகள் முன்னேறி மேலும் மேம்படும். இது இந்திய மாணவர்களின் அறிவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது நம் நாட்டின் ஒற்றுமையையும் அதிகரிக்கும். ஒரு பாடத்திட்டத்தில் பல்வேறு தொகுதிகளிலிருந்து பாடங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பின்னர் அறிவியல், வர்த்தகம், மனிதநேயம் அல்லது தொழில் போன்ற எந்தவொரு தொகுதியிலிருந்தும் பாடங்களைத் தேர்வு செய்ய முடியும். இந்தக் கல்விக் கொள்கை மக்கள் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.

புதிய கல்விக் கொள்கை `அனைவருக்கும் கல்வி டு எம்.பில் நிறுத்தம்!’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கற்றல், கேள்வி கேட்பது மற்றும் தீர்வு இந்த மூன்று விஷயங்களையும் ஒருபோதும் மாணவர்கள் நிறுத்தக் கூடாது. கற்கும்போது நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள், கேள்வி கேட்கும்போது ஒரு செயலைத் தாண்டி சிந்தனை செய்து அதற்கான வழியையும் கண்டுபிடிக்கிறீர்கள். இந்தப் புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் நலனுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் இந்தப் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கல்வி மற்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாகப் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

அடுத்த கட்டுரைக்கு