Published:Updated:

`நாங்கள் அரசியல் சார்பற்றவர்கள்!’- தஞ்சையில் அறிவித்த இந்திய மன்னர்களின் வாரிசுகள்

இந்தியாவை இந்தியர்கள்தான் ஆள வேண்டும் வெளி நாட்டவர் ஆளக் கூடாது, இந்திய இளைஞர்களுக்கு நமது வரலாறு தெரியாததால் குழப்பம் நிலவி வருகிறது.

கூட்டம்
கூட்டம் ( ம.அரவிந்த் )

`இந்திய ராணுவத்துக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முன் அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும். இந்தியாவை இந்தியர்கள்தான் ஆள வேண்டும்; வெளி நாட்டவர் ஆளக் கூடாது. இந்திய இளைஞர்களுக்கு நமது வரலாறு தெரியாததால் குழப்பம் நிலவி வருகிறது’ என இந்தியாவில் உள்ள மன்னர்களின் வாரிசுகள் தஞ்சாவூரில் தெரிவித்தனர்.

மன்னர்களின் வாரிசுகள்
மன்னர்களின் வாரிசுகள்

இந்தியாவில் உள்ள அனைத்து அரசக் குடும்பங்களின் மகா சங்க செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இதன் சங்கத் தலைவரும், பெரிய கோயில் அறங்காவலருமான சிவாஜி ராஜா பான்ஸ்லே தலைமை வகித்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மன்னர்களின் வாரிசுகளாக இருக்கும் 13 பேர் இதில் கலந்துகொண்டனர். மேலும், சங்கத்துக்கான பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தலைவர் சிவாஜி ராஜா பான்ஸ்லே செய்தியாளர்களிடம், ``இந்தச் சங்கம் அரசியல் சார்பற்றது. இதன் நோக்கம் இளைஞர்களுக்கு வரலாற்றை அறியச் செய்வதாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி பானிபட் போர் நினைவு நாள் அனுசரிக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு எனது தலைமையில் பானிபட் போர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பானிபட் நினைவுச் சின்னத்தைப் பராமரிக்க மராட்டிய அரசு ரூ.2.8 கோடி வழங்கியுள்ளது.

கூட்டம்
கூட்டம்

இந்திய ராணுவத்துக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முன் அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து அதன் பின்னர் தேர்வு செய்ய வேண்டும் என தெற்கு ராணுவ தளபதியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அவரும் அதை பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். இந்த அமைப்பில் மன்னர்கள் மற்றும் படைத்தளபதிகள், சேனாதிபதிகள், ஜமீன்தார் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவை இந்தியர்கள்தான் ஆள வேண்டும் வெளி நாட்டவர் ஆளக் கூடாது. இந்திய இளைஞர்களுக்கு நமது வரலாறு தெரியாததால் குழப்பம் நிலவி வருகிறது.

மேலும், மன்னர்களின் வரலாறு தெரியாததால் தேசப்பற்று குறைந்துகொண்டே வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து அரண்மனைகள், கோயில்கள், புராதன சின்னங்கள், கோட்டைகள் ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டில் உள்ள நமது பாரம்பர்ய கோயில்களையும் பாதுகாக்க வேண்டும். மன்னர்களின் வரலாற்றை வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் திரித்து எழுதுகிறார்கள். இது வேதனையை தருகிறது. மன்னர்களின் வரலாற்றை எழுதுபவர்கள் அவர்களின் உண்மைத் தன்மையை அறிந்து எழுத வேண்டும்.

கூட்டம்
கூட்டம்

புராதன சின்னங்களை வைத்திருப்பவர்கள் அதைப் பதிவு செய்ய வேண்டும் என இந்திய புராதன சின்னங்கள் சட்டத்தில் இடமுள்ளது. ஒரு பொருள் வைத்திருந்தால் அதன் வரலாறு தெரிய வேண்டும். வரலாறு இல்லாத, தெரியாத பொருள்களையும் பதிவு செய்யச் சொல்வது முரணாக உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்றார்.