Published:Updated:

`அமைதியைத்தான் நாங்களும் விரும்புகிறோம்!' - போராட்டம் குறித்து அஸ்ஸாம் காவல்துறையினர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறியும் இரண்டு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். `இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளது' என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அஸ்ஸாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேஎம்இ (Jamia Millia Islamia) பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ``குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அஸ்ஸாம் மாநில மக்கள் ஏற்கமாட்டார்கள். இது நம் மாநிலத்தின் மொழியையும் கலாசாரத்தையும் அழிக்கும். அதனால் அனைவரும் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் மாணவர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளனர். போராட்டம் காரணமாக அஸ்ஸாமில் ராணுத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கேள்வி எழுப்ப இருந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சைக் குறிப்பிட்டு அமளியில் ஈடுபட்டனர் பா.ஜ.கவினர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அஸ்ஸாம் நிலவரம் குறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா என்.டி.டி.வியிடம் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``மக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது எங்களுடைய பணியல்ல. அவர்கள் உத்தரவுகளை மீறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். 1000-க்கும் அதிகமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அமைதிக்கான பாதையில் செல்கிறோம். நேற்றைய தினத்தை விட இன்று சிறந்த நாளாகத்தான் இருந்தது. இது ஒரு கடினமான நேரம். நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். அமைதியாக நடந்த போராட்டத்தில், சிலர் வன்முறையைத் தூண்டிவிட்டனர். அதில், அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதில் காவல்துறையின் சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது” என்றார்.