Published:Updated:

`மனம், உடலளவில் மோசமான சூழ்நிலையிலும் பணியாற்றத் தயார்.. ஆனால்?’ -வைரஸ் அச்சத்தில் மருத்துவர்கள்

கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள் ( மாதிரிப் படம் )

``உடல் முழுவதும் வியர்வை வழியும். சில காயங்கள் ஏற்படும். ஆனால், நாங்கள் அதை செய்துதான் ஆக வேண்டும். எங்களால் எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது.”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகள் மீண்டு வரும் நிலையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் இதுவரை ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொருநாளும் கிட்டத்தட்ட 10,000 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கையும் 8,000-த்தைக் கடந்துவிட்டது. உலகளவில் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருவது பாதிப்புகளை இன்னும் அதிகமாக்கும் என நிபுணர்கள் தங்களது அச்சத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டு இருக்கும்போது படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை, பிற மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணங்கள் என பல பிரச்னைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீது எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து பணியில் ஈடுபடுவதால் பணியாளர்களும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர் டேவன் ஜூன்ஜா ஊடகங்களிடம் பேசும்போது, ``கொரோனா பாதிப்பு எப்போது உச்சநிலையை அடையும் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தக் கடினமான காலங்களில் நாங்கள் அனைவரும் மன உறுதியை நிலைநிறுத்தவே முயற்சி செய்கிறோம். எங்களை நாங்களே மோட்டிவேட் செய்து ஒவ்வொருநாளும் தொடர்ந்து பணிகளைச் செய்து வருகிறோம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். ஆனால், மனதளவிலும் உடல் அளவிலும் மோசமான சூழ்நிலை ஒன்றில் பணியாற்றவும் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை... கல்லாகட்டத் தயாராகும்  தனியார் மருத்துவமனைகள்!

தொடர்ந்து அவர் பேசுகையில், ``எங்கள் மீதான சுமையை இந்த பாதிப்புகள் நிச்சயமாக அதிகரித்துள்ளன. சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் விரைவில் குணமடையவே நாங்கள் விரும்புகிறோம். தொடர்ந்து அதிகமாக பாதிப்புகள் ஏற்படுவதால் அதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

டெல்லியில் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. ஜூலை மாதம் இறுதிக்குள் லட்சக்கணக்கான மக்கள் டெல்லியில் மட்டும் பாதிப்படைவார்கள் எனக் கடந்த வாரம் டெல்லி அரசு கூறியுள்ளது. இறப்புகள் பற்றிய சர்ச்சைகளிலும் டெல்லி அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதால் உரிய சிகிச்சைகள் இன்றி நோயாளிகள் உயிரிழக்கும் தகவல்களும் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் மைதானங்களை, படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளாக அரசு மாற்றி வருகிறது. மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் 20 சதவிகித படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகளைப் பார்க்க அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்களை கவனித்துக்கொள்ள பராமரிப்பாளர்கள் இரண்டு மடங்காக தேவைப்படுகிறார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செவிலியர்கள்
செவிலியர்கள்

``இந்தச் சூழல் நிச்சயமாக எங்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உங்களது உடலில் வைரஸ் எங்கிருந்து நுழைகிறது என்பதை ஒருபோதும் உங்களால் அறிய முடியாது” என்று கலக்கத்துடன் கூறுகிறார், செவிலியர் ஜோதி எஸ்டர். இவர் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். மற்றொரு செவிலியரான வினிதா, ``வெப்பம் அதிகமாக உள்ள சூழலில் பாதுகாப்பு ஆடைகளை அணிவதற்கு அதிகமான உடல் மற்றும் மன வலிமை தேவை. பிபிஇ அணிந்த பிறகு எங்களால் தண்ணீர் குடிக்க முடியாது. சாப்பிட முடியாது. கழிவறைக்குச் செல்ல முடியாது. உடல் முழுவதும் வியர்வை வழியும். உடலில் சில காயங்கள் ஏற்படும். ஆனால், நாங்கள் அதைச் செய்துதான் ஆக வேண்டும். எங்களால் எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது” என்று தங்களது வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

விரக்தியின் விளிம்பில் மருத்துவர்கள், செவிலியர்கள்... தமிழகக் கொரோனா வார்டுகளில் நிலவும் அவலம்!
அடுத்த கட்டுரைக்கு