Published:Updated:

`மோடியின் தம்பி மகள் என்று சொல்லல; சாதாரணமாக வந்துதான் புகார் அளித்தார்!'-டெல்லி போலீஸார்

போலீஸார், புகாரைப் பெற்றுக்கொண்டதும் உடனே நடவடிக்கையைத் தொடங்கினர்.

பிரதமர் மோடியின் தம்பி மகள் தமயந்தி
பிரதமர் மோடியின் தம்பி மகள் தமயந்தி

பிரதமர் மோடியின் சகோதரர், பிரகலாத் மோடி. இவரின் மகள், தமயந்தி பென் மோடி. அகமதாபாத்தில் வசித்துவரும் தமயந்தி, சில நாள்களுக்கு முன் அம்ரிஸ்டர் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அங்கிருந்து டெல்லி வந்துள்ளார். வடக்கு டெல்லி சிவில் லைன் பகுதியில் தமயந்தி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், தமயந்தி கையில் வைத்திருந்த பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர். பையில் இரண்டு மொபைல் போன்கள், ஆவணங்கள் சில முக்கியமான பொருள்களோடு, ரொக்கப்பணம் ரூ. 56,000 இருந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

தன்னிடம் இருந்து பை பறிக்கப்பட்டது குறித்து, தமயந்தி அந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸ் நிலையத்தில் பிரதமர் மோடியின் தம்பி மகள் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. தன்னை விஐபி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், சாமான்ய பெண்ணாக, கைப்பை பறிபோனது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

போலீஸாரும், புகாரைப் பெற்றுக்கொண்ட உடனே, நடவடிக்கையைத் தொடங்கினர். சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு இளைஞர்கள் இருவரை போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர். அவர்களிடத்தில் இருந்து 56,000 ரொக்கப் பணம் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீஸார் மீட்டனர்.

பிரதமரின் தம்பி மகள் என்பது தெரியாது.
டெல்லி போலீஸ்

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி வடக்கு துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ் கூறுகையில், "அந்தப் பெண், மிகச் சாதாரணமாக வந்துதான் எங்களிடம் புகார் அளித்தார். மற்றவர்களுக்கு நேர்ந்தால் என்ன நடவடிக்கை எடுப்போமோ அதே வேகத்தில்தான் நடவடிக்கையை எடுத்து கைப் பையைப் பறித்தவர்களைக் கைதுசெய்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த தமயந்தி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பேசினார். பிரதமர் மோடிக்கு அம்ருத்பாய் மோடி, பிரகலாத் மோடி, பங்கஜ்பாய் மோடி என்ற சகோதரர்கள் இருக்கிறார்கள்.