Published:Updated:

`வேலை இல்லைன்னா கூலி இல்ல.. சோறும் இல்ல!’- கலங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஊரடங்கு
ஊரடங்கு

நாங்கள் பசியால் செத்துவிடுவோம் போல் இருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் கூலித் தொழிலாளர்கள்.

`நோய்க்குச் சாவதா.. இல்லை பசிக்குச் சாவதா என்று தெரியவில்லை' எனக் கண்ணீர் வடிக்கின்றனர் நொய்டாவில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 21 ஊரடங்கு உத்தரவை கடந்தமாதம் அறிவித்தது. இந்த உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில் பல்வேறு மாநில அரசுகள் அதனை நீட்டித்துள்ளன. நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்தார்.

மோடி
மோடி

பிரதமரின் இந்த அறிவிப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் செவிகளில் இடியாய் வந்து இறங்கியது. கடந்த மார்ச் 24-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பு வெளியானதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப டெல்லியில் குவிந்தது, அதனால் தலைநகரே ஸ்தம்பித்தது எல்லாம் வேறு கதை. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்கு இன்றும் நடந்துகொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

’பாதுகாப்பாக இருக்கத்தான் சொன்னோம்; தடை இல்லை’- தன்னார்வலர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சொல்வது என்ன?

நொய்டாவில் கட்டுமான வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் லாக் டவுனால் சந்திக்கும் பிரச்னையை விளக்குகிறார் அங்கிருக்கும் சூப்பர்வைசர் திரிபுவன் குமார், “வெளிமாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது இங்கு சிக்கித்தவித்து வருகின்றனர். இவர்கள் எல்லாம் பீகார், மேற்குவங்கம், மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் இப்போது இங்கே சும்மாதான் இருக்கிறார்கள்.

ஊரடங்கு
ஊரடங்கு

வேலையில்லை என்றால் கூலி இல்லை. கூலி இல்லையென்றால் உணவு இல்லை. மத்தியப்பிரதேசத்திலிருந்து ஒரு விதவைப்பெண் இங்கே வேலைக்கு வந்துள்ளார். மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டி இங்கு வேலைக்கு வந்துள்ளார். இப்போது நொய்டாவில் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்குக் கூலியும் இல்லை உணவும் இல்லை. ஊரில் அவரது நிலத்தில் பயிரிடப்பட்ட கோதுமை அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கிறது. லாக் டவுன் காரணமாக அந்த வேலையும் நடக்கவில்லை. இங்கு இன்னும் நிறைய குடும்பங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றனர்” என்றார்.

அங்கிருந்த தொழிலாளர்கள் சிலர் பேசுகையில், ``வெளிநாடுகளில் இருப்பவர்களை எல்லாம் விமானம் மூலம் இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்து வருகின்றனர். ஆனால் எங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

உடல்நிலை சரியில்லாதவர்களை இங்கே வைத்து மருத்துவம் பாருங்கள், மற்றவர்களை ஊருக்கு அனுப்புங்கள். எங்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. வீடு இல்லாதவர்கள் போன்று சாலையில் நடந்து செல்கிறோம். இந்த நோய் எங்களைக் கொல்வதற்கு முன்பாக நாங்கள் பசியால் செத்துவிடுவோம் போல் இருக்கிறது” எனத் தங்கள் நிலையை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

News Source : NDTV

அடுத்த கட்டுரைக்கு