Published:Updated:

`முப்படைத் தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு’ -பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்திய, சீன எல்லை விவகாரம் பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்திய, சீனா எல்லை விவகாரம் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எல்லையில் வீரர்களுக்கு மத்தியில் மோதல் நடப்பது இயல்புதான் என்றாலும் இந்த முறை நடைபெற்ற தாக்குதலில் இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை மோசமான நிலையில் இருக்கிறது. சீனா தரப்பிலும் 43 பேர் வரை பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. எல்லையில் பலியானவர்களின் உடல்களை சீனா ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முப்படையின் தலைமை தளபதியான பிபின் ராவத், மற்றும் முப்படைகளுக்கான தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இந்த விவகாரம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், ``கல்வான் பள்ளத்தாக்கில் நாட்டின் வீரர்களின் இழப்பு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையும் தருகிறது. எல்லையில் நமது வீரர்கள் தைரியத்தையும் வீரத்தையும் வெளிபடுத்தியுள்ளனர். நாட்டுக்காக அவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். உங்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு என்றும் மறக்காது” என்றார்.

`இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம்’ - #GalwanValley மோதல் குறித்து ராணுவம்

முன்னதாக முப்படைத் தளபதிகளுடன் நடைபெற்ற கூட்டத்திலும் ராஜ்நாத் சிங், `பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முப்படைகளும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்’என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியா சீனா இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் சீனா, எல்லைப்பகுதியிலிருந்து வீரர்களை பின்வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.

 சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்

இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லிஜியன், ``கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்குச் சொந்தமானது. இந்திய எல்லை பாதுகாப்பு படை எல்லைகளை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது. ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை இந்தியா மீறிவிட்டது. பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்க ரீதியிலாகவும் ராணுவத்தின் மூலமாகவும் பேசி வருகிறோம். இந்த விவகாரத்தில் எது சரி, எது தவறு என்பது தெளிவாக இருக்கிறது. இந்தச் சம்பவம் சீன எல்லையில் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மீண்டும் மோதல்கள் நடைபெறுவதை சீனா விரும்பவில்லை” என்றார்.

மோடி
மோடி

இந்திய, சீன எல்லை விவகாரம் பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. 19 -ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லை விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்தியா எல்லையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு