Published:Updated:

`ஹாஸ்டல் மூடிட்டாங்களாம்.. பசங்க தனியா இருக்குதுங்க!’ -கர்நாடகாவில் தவிக்கும் ஜவ்வாதுமலைவாழ் மக்கள்

கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை  மக்கள்.
கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை மக்கள்.

தமிழகத்திலிருந்து மிளகு மற்றும் காப்பிக் கொட்டை பறிக்கும் வேலைக்காக கர்நாடகம் சென்ற 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தமிழகம் திரும்ப முடியாமல், பசியும் பட்டினியுமாகக் கர்நாடகாவில் தவித்து வருகிறனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் பகுதிகளில் வசிக்கும் அதிகப்படியான மலைவாழ் மக்கள் வருடம்தோறும் நான்கு மாதங்கள் மட்டும் மிளகு, காபிக் கொட்டை பறிப்பதற்குக் கூலிக்காக கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு குடும்பத்தோடு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தால் அவர்களை வீட்டில் உள்ள வயதானவர்களிடம் விட்டுவிட்டுச் செல்வார்கள். சிலரது பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிப்பதால் அங்கேயே விட்டுவிட்டுச் செல்வார்கள். இதுதான் இவர்களின் வாழ்க்கை முறை.

கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள்.
கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்ற ஜவ்வாதுமலை மக்கள் சிலர், 144 ஊரடங்கு தெரியாததால் மிளகு எஸ்டேட்களிலேயே மாட்டிக்கொண்டு உணவுக்கே வழியில்லாமல் பசியும் பட்டினியுமாகத் தவித்து வருகிறனர். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் ஆஞ்சி பகுதியில் உள்ள மிளகு எஸ்டேட்களில் தங்கியிருக்கும் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த மக்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ``நாங்க இப்போ கர்நாடகாவில் உள்ள மிளகு எஸ்டேட்டில் இருக்கிறோம். டிசம்பர் மாசம் கடைசியில்தான் இங்கே வந்தோம். வந்து ஒரு மாசம்தான் முழுசா வேலை செஞ்சோம். கொரோனா நோய் ஊரடங்கு உத்தரவு போட்டாங்கனு எங்களுக்குத் தெரியாது. பஸ், லாரிலாம் போகாதுனும் எங்களுக்குத் தெரியாது. வேலையும் செய்யக்கூடாதுனு சொல்லிட்டாங்க முதலாளிங்க. இருந்த கொஞ்சம் பணத்துல சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு வாங்கிட்டோம். இப்போ கையில பணம் இல்லத்தால வெறும் அரிசி மட்டும் வாங்கி கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்.

எங்க மூலமா கொரோனா நோய் வந்துடும்னு, கடையில பொருளும் தர மாட்டேன்கிறாங்க... ஊருக்குள்ளவும் வரவேண்டாம் என்று சொல்றாங்க. ஒரு சில கடைக்காரங்கதான் பாவம் புண்ணியம் பார்த்து தராங்க. இப்போ அத வாங்கவும் பணம் இல்ல. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசியும் பட்டினியுமாக கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். எங்க கூட குழந்தைகளும் பசியோடு கஷ்டப்படுதுங்க. கர்நாடகா அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ்நாடு அரசாங்கம்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். எப்படியாவது எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று விட்டுவிடவேண்டி கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறோம். பிள்ளைங்க ஹாஸ்டல் எல்லாம் மூடிட்டாங்கலாம்.. வீட்ல பசங்க தனியா இருக்குதுங்க. எப்போ வருவீங்க என்று கேட்டு அழுவுதுங்க ” என்று வேதனையோடு கூறினார்கள்.

கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள்.
கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள்.

இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். ``மற்ற மாநில அரசுகளிடம், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எல்லா மாநிலங்களிலும் நம் மக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். இரண்டு மாநில செக்போஸ்ட் இருப்பதால் அழைத்து வருவதில் சில நடைமுறை சிக்கல் இருக்கிறது. கர்நாடகா மிளகு தோட்டத்தில் இருக்கும் மக்களும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்துவிட வேண்டும் என்று அப்படிக் கூறுகிறார்கள்” என்றார். பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் சென்ற மக்களை பாதுகாப்பதும் பத்திரமாக அழைத்துவருவதும் மாநில அரசுகளின் கடமை. அதை உணர்ந்து விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு