`விளம்பரத்துக்காக இல்லை; நபிகளைப் பின்பற்றினோம்' - இந்துப் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்த ஜமாத்

விளம்பரத்துக்காக இந்துப் பெண்ணுக்கு மசூதிக்குள் திருமணம் செய்து வைக்கவில்லை என்று ஜமாத் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 19-ம் தேதி மசூதி ஒன்றில் இந்துப் பெண்ணுக்கு இந்து முறைப்படி வேதம் ஓதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கேரள மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இணையத்திலும் செய்தி வைரலாகியது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் 'இதுதான் கேரள மக்களின் மதச் சார்பின்மை' என்று இந்தத் திருமண நிகழ்வு குறித்து பாராட்டியிருந்தார்.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செராவலி ஜும்மா மசூதியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இந்த மசூதி கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மசூதி வரலாற்றில் இப்படியொரு நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. இந்தத் திருமணம் குறித்து மசூதியின் நிர்வாகி நுஜூமுதீன், ``கணவரை இழந்த பெண் எங்களிடத்தில் அந்த உதவியைக் கோரியபோது நபிகளின் வழியைப் பின்பற்றினோம்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நுஜூமதீன் கூறுகையில், ``உதவி கோரிய பிந்து அவரின் கணவர் அசோகன் ஆகியோரை எங்களுக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அசோகன் உயிருடன் இருக்கும்போது, இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திடீரென்று, அசோகன் மரணமடைந்துவிட, மகள் அஞ்சுவின் திருமணத்தை நடத்த முடியாமல் பிந்து தவித்தார். எங்கள் மசூதியின் வரலாற்றில் முன் எப்போதும் இப்படிப்பட்ட உதவியை யாரும் கோரியதில்லை.
இதனால், அஞ்சு மற்றும் சரத் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைக்க ஜமாத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிந்துவின் விண்ணப்பக் கடிதத்தை நான் ஜமாத்தின் முன்வைத்தபோது, ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. `உனது அண்டை வீட்டார் பசியுடன் இருக்கும்போது அவர்களுக்கு நீ உணவளிக்கவில்லை என்றால் நீ எங்களில் ஒருவனில்லை' என்ற நபிகளின் வாக்குபடியே நடந்தோம்.
என் மகள் எதார்த்தமாக அஞ்சுவின் திருமண அழைப்பிதழை ஃபேஸ்புக்கில் பதிவிட, அது வைரலாகிவிட்டது.ஜமாத் செயலாளர் நுஜூமுதீன்
மனமகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அஞ்சுவின் திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால், நிச்சயமாக நாங்கள் விளம்பரத்துக்காக இதைச் செய்யவில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ள வாட்ஸ் அப் பக்கத்தில் அஞ்சுவின் திருமண அழைப்பிதழைப் பெருமையுடன் பதிவிட்டேன். என் மகள் அதை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறாள். தொடர்ந்து, மீடியாக்களில் இருந்து போன் மேல் போன் வந்தது. அடுத்த நாள் காலையில் அனைத்து பேப்பர்களிலும் செய்தியாகிவிட்டது. இயற்கை பேரிடர் போன்ற தருணங்களில் பல சமய மக்களுக்கும் மசூதியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மசூதிக்குள் இந்து முறைப்படி திருமணம் நடந்தது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறையாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
அஞ்சுவின் திருமணத்துக்காக மசூதி சார்பாக சீதனமாக 10 பவுன் தங்கச் சங்கிலியும் ரூ. 2 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளது. அஞ்சுவின் தந்தை அசோகன் ஸ்தானத்தில் இருந்து மசூதி நிர்வாகிகளில் ஒருவரான நஷீர் என்பவர் மணமகளின் கையைப் பிடித்து மணமகன் சரத்குமாரின் கரம் பற்ற வைத்ததும் குறிப்பிடத்தக்கது. மணமகளின் தாயார் பிந்து கூறுகையில், ``எனக்கு மத வேறுபாடுகள் எல்லாம் தெரியாது. உதவி என்று அவர்களிடத்தில் கேட்டேன்.

அனைவரும் முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு விருந்தினர்கள் வந்துகொண்டே இருந்தனர். வெளியூர்களிலிருந்தும் 4 பேருந்துகளில் விருந்தினர்கள் வந்திருந்தனர். போன் செய்தும் பலரும் வாழ்த்தினர்'' என்கிறார் மன நிறைவுடன்.
திருமண விருந்தாக அருமையான கேரள சதயா வழங்கப்பட்டது.