Published:Updated:

`கொரோனாவுக்கு மருந்து..14 நாள்களில் குணம்..விரைவில் ஆதாரங்கள்!’- `பதஞ்சலி’ பாலகிருஷ்ணன்

பதஞ்சலி - பாலகிருஷ்ணன்
பதஞ்சலி - பாலகிருஷ்ணன்

``எங்கள் மருந்தை நோயாளிகள் உட்கொண்ட பிறகு 5 முதல் 14 நாள்களில் அவர்கள் குணமடைந்து விடுகிறார்கள். எனவே, ஆயுர்வேத சிகிச்சை வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த முடியும்”

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ், கொரோனா. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை பாதித்து வரும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸைக் குணப்படுத்த மருந்து இல்லாத நிலையில், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பலரும் மருந்தைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். வைரஸ் தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நாள் முதலே இதற்கு ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவர்கள் மருந்து இருப்பதாகக் கூறிவருகின்றனர். எனினும், ஆதாரப்பூர்வமாக எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பதஞ்சலி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆயுர்வேத முறையில் 5 முதல் 14 நாள்களில் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என்று கூறி அதிரவைத்திருக்கிறார்.

பாபா ராம்தேவுடன் பாலகிருஷ்ணன்
பாபா ராம்தேவுடன் பாலகிருஷ்ணன்

பதஞ்சலி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாகப் பேசுகையில், ``கொரோனா வைரஸ் அதிகளவில் பரவத் தொடங்கியவுடன் இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாங்கள் குழு ஒன்றை நியமித்தோம். வைரஸ் உடலில் பரவுவதை தடுக்கும் மற்றும் வைரஸை எதிர்த்து போராடும் மருந்தை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், இந்த மருந்தை வைரஸால் பாதிப்படைந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வுகளை மேற்கொண்டோம். எங்களுக்கு 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ``எங்கள் மருந்தை நோயாளிகள் உட்கொண்ட பிறகு 5 முதல் 14 நாள்களில் அவர்கள் குணமடைந்து விடுகிறார்கள். எனவே, ஆயுர்வேத சிகிச்சை வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த முடியும். நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம். இந்த மருந்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடுத்த 4 முதல் 5 நாள்களில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். ஆனால், இந்த மருத்துவப் பரிசோதனைகள் எங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. யோகா குரு ராம்தேவுடன் இணைந்து பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கியவர் இந்த பாலகிருஷ்ணா.

Vikatan

பல்வேறு விதமான மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி அரசுகள் தங்களது மக்களுக்கு சிகிச்சைகளை அளித்து வருகின்றன. இந்தியாவிலும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு முறைகளை மருத்துவர்கள் கையாண்டு வருகின்றனர். எனினும், பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் இவ்வளவு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸூக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,884 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாவது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா
கொரோனா

உத்தரகாண்ட் அரசானது வைரஸூக்கு எதிராகப் போராடுபவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகளை வாங்க கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 2.48 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு