Published:Updated:

`கழிவறைகள்தான் எங்கள் உயிரைக் காத்தன!’ -போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்த மேற்குவங்கம்

மேற்குவங்க போராட்டம்
மேற்குவங்க போராட்டம்

மேற்குவங்கத்தில் நடந்த பெரும் கலவரத்தில் அங்கிருந்த ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு அனைத்துப் பொருள்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

`குடியுரிமை திருத்தச் சட்டம்’ - கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வரை இந்த வார்த்தையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த வார்த்தையின் அர்த்தம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், இன்று இந்தியா முழுவதும் இந்த ஒரு வார்த்தை ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஒருபுறமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு புறமும் நாடு முழுவதும் மக்கள் குடியுரிமைச் சட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மேற்குவங்க போராட்டம்
மேற்குவங்க போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி தாக்கலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் தொடங்கிய எதிர்ப்பு மக்களைக் கடந்து தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சியினரே இந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட மிகப்பெரும் பேரணி நடந்தது.

மேற்குவங்கம் போராட்டம்
மேற்குவங்கம் போராட்டம்

இதற்கிடையில், அதே மேற்குவங்கத்தின் மற்றொரு மூலையில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் ரயில் நிலையம் முற்றிலும் சூறையாடப்பட்டுள்ளது. பயணிகள் இல்லாத ஐந்து ரயில்கள், 15 அரசுப் பேருந்துகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அக்ரா (akra) ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களால் தாங்கள் பெரும் சிரமமடைந்ததாக ரயில்வே பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ``குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி பெரிய கும்பல் நேற்று காலை 10:30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு!-குடியுரிமை சட்டப்  போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்

அவர்கள் நேராகத் தண்டவாளத்தில் இறங்கி ரயில்களின் போக்குவரத்தைத் தடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். நான் இயக்கிய ரயிலில் ஏறிய போராட்டக்காரர்கள் என்னை இருக்கையிலிருந்து இறக்கி கீழே விட்டுவிட்டு ரயிலின் இன்ஜின் பகுதி கட்டுப்பாட்டு அறை போன்ற அனைத்தையும் அடித்து உடைத்தனர். அது மிகவும் மோசமான சம்பவமாக இருந்தது. இது மட்டுமல்லாமல் தண்டவாளத்துக்கு வெளியில் டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் இருக்கை போன்றவற்றைக் கூட நொறுக்கித் தீ வைத்தனர்.

மேற்குவங்க போராட்டம்
மேற்குவங்க போராட்டம்

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் உட்பட பல ரயில்வே ஊழியர்கள், ரயிலிலிருந்த கழிவறைக்குள் சென்று ஒளிந்துகொண்டோம். சொல்லப் போனால் கழிவறைகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றின. பின்னர் வெளியில் வந்து நடந்த சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினோம். அவர்கள் முதலில் எங்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார்கள். இறுதியாகக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி காவலர்கள், போராட்டக்காரர்களைக் கலைத்தனர்” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ரயில் லோகோ பைலட் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் மற்றும் போராட்டத்தினால் அந்த மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் 10 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு