Published:Updated:

`ஃபிளைட்ல உட்காருவோம்னு நினைச்சுக்கூடப் பார்க்கல!’- டெல்லி விவசாயியால் நெகிழ்ந்த பீகார் தொழிலாளர்கள்

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள் ( ANI )

டெல்லியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னிடம் வேலைபார்த்து வந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் 10 பேரை விமானத்தில் டிக்கெட் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு 4 வது முறையாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், இது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

ஊரடங்கால் நாடு முழுவதும் கூலி வேலை உள்ளிட்ட தினக்கூலி வேலைகள் செய்துவந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். பேருந்து, ரயில் எனப் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறி போராட்டங்களில் ஈடுபட்டனர். தொழிலாளர்களில் பலர் பலநூறு கிலோமீட்டர்கள் நடந்தும் சைக்கிள் மிதித்தும் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

`விபத்தில் இறந்த தாய்.. அழுத குழந்தை.. குழம்பிய தொழிலாளி!’ - புலம்பெயர்ந்தவர்களைத் தொடரும் சோகம்

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. மாநில அரசுகளில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள், இந்த சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், டெல்லியைச் சேர்ந்த விவசாயி பப்பன் கெஹ்லாட் என்பவர், தன்னிடம் வேலை பார்த்துவந்த பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 10 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ரூ.68,000 மதிப்பில் அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ள அவர், ஊர்களுக்குச் சென்றபிறகு பணத் தேவையால் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆளுக்கு 3,000 ரூபாய் பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பீகார் தொழிலாளர்கள்
பீகார் தொழிலாளர்கள்
ANI

அந்தத் தொழிலாளர்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பீகாரின் பாட்னாவுக்கு இன்று காலை அனுப்பப்பட்டனர். பணிபுரியும் இடத்தில் இருந்து தனது சொந்த செலவில் வாகனங்கள் மூலம் விமான நிலையத்துக்கு அவர்களை அழைத்து வந்து வழியனுப்பி வைத்திருக்கிறார் பப்பன். இதுகுறித்து பப்பன் கெஹ்லாட்டின் சகோதரர் நிரஞ்சன் கெஹ்லாட் கூறுகையில், ``ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இவர்களை ரயிலில் அனுப்ப டிக்கெட் முன்பதிவு செய்ய எவ்வளவோ முயற்சிகள் எடுத்தோம். ஆனால், எங்களால் முடியவில்லை. சிறப்பு ரயில்களில் எங்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை.

`இறந்த உடல்களுடன் திறந்த ட்ரக்கில் பயணித்த தொழிலாளர்கள்’ - அதிர்ச்சி கொடுத்த உ.பி சம்பவம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களிடம் பணிபுரிந்துவரும் இவர்களது பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் எனச் சிந்தித்தோம். அதையடுத்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பாகவே அவர்களுக்கு உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழு உடல்நலனுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து சான்றிதழ் பெற்றுவிட்டோம். இவர்கள் 10 பேரும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே சொந்த ஊர்களுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஊரடங்கு அமலில் இருந்ததால் அனுப்ப முடியவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

ஆயிரக்கணக்கான மைல்கள் அவர்களை நடந்து செல்ல நாங்கள் அனுமதித்திருந்தால், அது அவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும். புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்குவது குறித்து நிறைய செய்திகளை நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு நிலை இவர்களுக்கு வந்துவிடக் கூடாது. பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். உரிய மருத்துவச் சான்றிதழ் அந்த 10 பேருக்கும் இருப்பதால், எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்கள் சொந்த ஊர்களுக்குப் போய்ச் சேர்வார்கள்’’ என்றார்.

கெஹ்லாட் குடும்பத்தினர் டெல்லியில் 1993-ம் ஆண்டு முதல் காளான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் காளான் சீஸன் இருக்கும் என்று சொல்லும் நிரஞ்சன், அந்த 10 தொழிலாளர்களையும் விமான நிலையத்துக்கு வந்து நேரில் வழியனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

நிரஞ்சன் கெஹ்லாட்
நிரஞ்சன் கெஹ்லாட்
ANI

விமானம் ஏறுவதற்கு முன்பு பேசிய தொழிலாளர்கள், ``விமானத்தில் அமர்ந்து பயணிப்போம் என ஒருநாளும் கனவில்கூட எண்ணியதில்லை. எங்களுக்கு வேலை கொடுத்தவர், அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்’’ என்று நெகிழ்ந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு